ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் செல்போன் அனுமதி கிடையாது
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் செல்போன் கொண்டுசெல்ல அனுமதி கிடையாது என்று கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் செல்போன் கொண்டுசெல்ல அனுமதி கிடையாது என்று கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
வாக்கு எண்ணிக்கை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 7 ஊராட்சி ஒன்றியங்களில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. திமிரி ஒன்றிய வாக்குகள் கலவை ஆதிபராசக்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது. இங்கு வாக்கு எண்ணிக்கை 6 சுற்றுகளுக்கு மேல் நடைபெற உள்ளது. ஆற்காடு ஒன்றிய வாக்குகள் ஆற்காடு ஜி.வி.சி. கல்வியல் கல்லூரியில் 5 சுற்றுகளாக நடைபெற உள்ளது.
வாலாஜா ஒன்றிய வாக்குகள் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் 4 சுற்றுகளாக நடக்கிறது. அரக்கோணம் ஒன்றிய வாக்குகள் கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 5 சுற்றுகளாகவும், காவேரிபாக்கம் ஒன்றிய வாக்குகள் சப்தகிரி பொறியியல் கல்லூரியில் 4 சுற்றுகளாகவும், நெமிலி ஒன்றிய வாக்குகள் பனப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 5 சுற்றுகளாகவும், சோளிங்கர் ஒன்றிய வாக்குகள் சோளிங்கர் எத்திராஜம்மாள் முதலியாண்டாள் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 5 சுற்றுகளாக எண்ணப்படுகிறது.
அனுமதி கிடையாது
இந்த 7 வாக்கு எண்ணும் மையங்களில் 2,811 அலுவலர்கள் பணியில் ஈடுபட உள்ளனர். வாக்கு மையங்களில் வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் யாரும் செல்போன் எடுத்துவர அனுமதி கிடையாது. வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கும் செல்போன் எடுத்து வர அனுமதி கிடையாது. செல்போன் கொண்டு வந்தால் வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கவுண்ட்டரில் செல்போனை வைத்து விட வேண்டும். தேர்தல் நுண் பார்வையாளர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வட்டார தேர்தல் பார்வையாளர்களுக்கு மட்டும் செல்போன் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.