வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே கோர்ட்டு ஊழியர் வீட்டில் திருட்டு
வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே கோர்ட்டு ஊழியர் வீட்டில் ரூ.75 ஆயிரம் திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வேலூர்
வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே கோர்ட்டு ஊழியர் வீட்டில் ரூ.75 ஆயிரம் திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கோர்ட்டு ஊழியர்
வேலூர் போலூஸ் சூப்பிரண்டு மற்றும் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் குணசீலன். வேலூர் கோர்ட்டில் இளநிலை உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கோமலீஸ்வரி. நேற்றுமுன்தினம் அவர்கள் குடும்பத்துடன் கோமலீஸ்வரியின் சொந்த ஊரான குடியாத்தத்திற்கு சென்றனர்.
இதனைப்பயன்படுத்தி மர்மநபர்கள் நள்ளிரவில் குணசீலன் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ.60 ஆயிரம் மற்றும் பூஜை அறையில் 2 உண்டியல், அவருடைய குழந்தை பணம் சேர்த்து வைத்திருந்த ஒரு உண்டியல் ஆகியவற்றை உடைத்து அதிலிருந்த பணத்தையும் கொள்ளையடித்து சென்று விட்டனர்.
ரூ.75 ஆயிரம்
இந்தநிலையில் நேற்று காலை குணசீலன் வீட்டுக்கு வழக்கமாக பால் வினியோகம் செய்பவர் வந்தார். அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் குணசீலன் ஊரில் இல்லை என தெரிவித்தனர். அதற்கு பால் வியாபாரி வீடு திறந்து கிடப்பதாக கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் இதுகுறித்து குணசீலனுக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர் வந்து பார்த்தபோது வீட்டில் திருட்டு நடந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து ஆய்வு செய்தனர். மொத்தம் ரூ.75 ஆயிரம் திருட்டு போனதாக போலீசார் தெரிவித்தனர். வேலூர் கலெக்டர் அலுவலகம் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே அமைந்துள்ள வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் திருட்டு நடந்திருப்பது அப்பகுதி மக்களிடைய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.