வாக்கு எண்ணும் மையத்தில் காலை 6 மணிக்குள் இருக்க வேண்டும்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் காலை 6 மணிக்குள் இருக்க வேண்டும் என்று வாக்கு எண்ணிக்கை அலுவலர்களுக்கு கலெக்டர் மோகன் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2021-10-11 16:24 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் மையங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் டி.மோகன் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-
வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் அலுவலர்கள் அனைவரும் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிக்குள் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வருகை புரிந்திட வேண்டும். வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு குலுக்கல் முறையில் வாக்கு எண்ணும் அறைகள், மேஜைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும். முதலாவதாக ஊராட்சி ஒன்றிய பாதுகாப்பு அறையில் இருந்து தபால் வாக்குப்பெட்டியை வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள வகை பிரித்தல் அறைக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்குவதற்கு முன்பே கொண்டு செல்ல வேண்டும். போலீசாரின் பரிசோதனைக்கு பின்னரே வேட்பாளர்கள், அவர்களது முகவர்களை வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் அனுமதிக்க வேண்டும். வேட்பாளர்கள் முன்னிலையில் வாக்குப்பெட்டியை திறந்து பாதுகாப்பு அறைக்கு வைக்கப்பட்டுள்ள முத்திரையை அகற்றி முதல் சுற்றுக்கான வாக்குப்பெட்டியை வகை பிரித்தல் செய்யும் இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். சுற்று வாரியாக எண்ணப்படும் வாக்குகளை அதற்கென்று உரிய படிவத்தில் பூர்த்தி செய்து உரிய தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வழங்க வேண்டும்.

அறிவுரை

மேலும் வாக்கு எண்ணும் மேஜையின் மேல் எந்தெந்த ஊராட்சியின் வாக்குச்சாவடி எண் எண்ணப்படுகிறது என எழுதி வைக்க வேண்டும். ஒவ்வொரு சுற்றின்போதும் முடிவுகளை அறிவிக்கவும், ஒவ்வொரு சுற்றுக்கான வேட்பாளர்கள், முகவர்களை அழைக்க ஒலிப்பெருக்கி வசதி ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு வாக்குப்பெட்டியும் எந்த மேஜையில் வகை பிரிக்கப்படுகிறது, எந்த தேர்தலுக்கு வாக்கு எண்ணப்படுகிறது என்று சுற்று வாரியான விவரம் வாக்கு எண்ணிக்கைக்கு முன்னரே சுவரொட்டிகள் மூலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் வாக்கு எண்ணும் மையத்திலும் கட்டாயம் வைக்க வேண்டும்.
ஒவ்வொரு சுற்று முடிவில் வெற்றி பெற்ற வேட்பாளருக்கு தேர்தல் முடிவு அறிவிப்பினை அன்றே வழங்கப்பட வேண்டும். ஒவ்வொரு தேர்தல் நடத்தும் அலுவலரிடம் 3 அலுவலக உதவியாளர் நிலையில் அலுவலர்கள் பணி நியமனம் செய்து வாக்கு எண்ணிக்கை முடிக்கப்பட்ட வாக்குச்சீட்டுகளை பண்டல் செய்து சிலிப் ஒட்டி சீலிடப்பட்டு பாதுகாப்பான முறையில் வைத்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்