இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது

விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகிறது. வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரத்தை சுற்றுவாரியாக அறிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-10-11 16:18 GMT
விழுப்புரம், 

விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முதல்கட்டமாக கடந்த 6-ந் தேதியன்றும், 2-ம் கட்டமாக 9-ந் தேதியன்றும் நடந்து முடிந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (செவ்வாய்க்கிழமை) எண்ணப்படுகிறது. 
வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. இப்பணியில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் 5,605 பேரும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 9 ஒன்றியங்களில் 3,810 பேரும் ஈடுபடுகின்றனர். மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி மன்ற தலைவர், வார்டு உறுப்பினர் ஆகிய 4 பதவிகளுக்கும் தனித்தனியாக அறைகள் ஒதுக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்படுகிறது.

சுற்றுவாரியாக அறிவிப்பு 

வாக்குகள் எண்ணும் அறைகளுக்குள் சின்னம் வாரியாக வாக்கு சீட்டுகளை பிரித்து போடவும், அவற்றை எண்ணி முடிவுகளை சொல்வதற்கும் பெரிய மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. 
அதை சுற்றிலும் வேலி போடப்பட்டு அதன் வெளியே நின்று வேட்பாளர்கள், அவர்களது முகவர்கள் வாக்கு எண்ணிக்கையை நேரடியாக பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு சுற்று முடிவிலும் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் ஒலிப்பெருக்கி மூலம் அறிவிக்கப்படும்.

பலத்த பாதுகாப்பு

உள்ளாட்சி தேர்தல் வாக்குச்சீட்டு முறையில் நடைபெற்றதால் அதன் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் கிடைக்க காலதாமதம் ஆகும். எனவே வாக்கு எண்ணிக்கை நாளை (அதாவது இன்று) வரை நடைபெற வாய்ப்புள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 
வாக்கு எண்ணும் பணியையொட்டி விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள 22 வாக்கு எண்ணும் மையங்களை சுற்றிலும் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டுள்ளதோடு 3 அடுக்கில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஆய்வு 

இதனிடையே விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 வாக்கு எண்ணும் மையங்களை நேற்று மாவட்ட கலெக்டர் டி.மோகன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா ஆகியோர் பார்வையிட்டு அங்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 9 வாக்கு எண்ணும் மையங்களை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் செய்திகள்