ஆபத்தை உணராமல் சித்திரைச்சாவடி தடுப்பணையில் குளித்து விளையாடும் சிறுவர்கள்
ஆபத்தை உணராமல் சித்திரைச்சாவடி தடுப்பணையில் குளித்து விளையாடும் சிறுவர்கள்
பேரூர்
ஆபத்தை உணராமல் சித்திரைச்சாவடி தடுப்பணையில் சிறுவர்கள் குளித்து விளையாடி வருகிறார்கள். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.
பருவமழை தீவிரம்
கோவையின் ஜீவநதியாக நொய்யல் ஆறு விளங்குகிறது. பருவமழைக்காலங்களில் நொய்யல் ஆற்றில் வெள்ளம் பெருக்கடுத்து ஓடும். மேலும் நொய்யல் ஆறு மூலம் கோவையில் 18-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்புகின்றன. இந்த குளங்களில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் ஆயிரக்கணக்கான விவசாயி நிலங்கள் பாசனம் பெறுகிறது.
தற்போது பருவமழை தொடங்கி கோவை மாவட்டத்தில் பருவமழை பெய்து வருகிறது. பருவமழை தீவிரம் அடைந்ததன் விளைவாக தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மேலும், ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் கோவையின் நீர் ஆதாரமாக விளங்கும் குளங்களுக்கு தண்ணீர் திருப்பி விடப்பட்டுள்ளது. சிறுவாணி நீர்பிடிப்பு பகுதி மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளில் விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது.
ஆபத்தை உணராத சிறுவர்கள்
இதனால் நொய்யல் ஆற்றில் எப்போது வேண்டுமானாலும் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என்ற சூழ்நிலை உள்ளது. ஆனால், இந்த ஆபத்தை சிறிதும் உணராத வகையில் தினமும் பேரூர் அருகே உள்ள சித்திரைச்சாவடி தடுப்பணையில் ஏராளமான சிறுவர்களும், இளைஞர்களும் குளித்து விளையாடி வருகின்றனர்.
ஆற்றில் தண்ணீர் வரத்து திடீரென அதிகரிக்கும் பட்சத்தில், தண்ணீருக்குள் குதித்து விளையாடும் சிறுவர்கள், இளைஞர்கள் ஆற்றில் அடித்துச் செல்லக்கூடிய அபாயம் உள்ளது.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
நொய்யல் ஆற்றின் குறுக்கே சித்திரைச்சாவடி தடுப்பணை உள்ளது. தற்போது கோவை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. சில நேரங்களில் பலத்த மழையும் பெய்கிறது. இதனால் ஆற்றில் எந்தநேரத்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம். ஆனால் இந்த ஆபத்துகளை உணராமல் சிறுவர்கள் முதல் வாலிபர்கள் வரை சித்திரைச்சாவடி தடுப்பணையில் ஆனந்தமாக குளித்து வருகிறார்கள்.
மேலும் இந்த அணையில் சகதி பகுதிகள் நிறைந்து காணப்படுகிறது. இதனால் அதில் சிறுவர்கள் சிக்க வாய்ப்பு உள்ளது. எனவே சித்திரைச்சாவடி தடுப்பணையில் சிறுவர்கள் மற்றும் வாலிபர்கள் குளிக்க பொதுப்பணித்துறையினர் மற்றும் போலீசார் தடை விதிக்க வேண்டும். தடையை மீறுபவர்கள் மீது, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.