வேன் கண்ணாடி உடைப்பு 3 பேருக்கு வலைவீச்சு

கொடைரோடு அருகே வேன் கண்ணாடியை உடைத்தது தொடர்பாக 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;

Update:2021-10-11 20:53 IST
கொடைரோடு:
கொடைரோடு அருகேயுள்ள பள்ளப்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 29). வேன் டிரைவர். நேற்று முன்தினம் இவர் பள்ளப்பட்டி சிப்காட்டில் இருந்து தொழிலாளர்களை வேனில் ஏற்றிக்கொண்டு கவுண்டன்பட்டிக்கு சென்று அவர்களை இறக்கி விட்டார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். அவர்கள் பட்டா கத்தியை எடுத்து வேனின் முன்பக்க கண்ணாடி, இடதுபக்க கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். இதுகுறித்து ரமேஷ் கேட்டதற்கு அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
முன்னதாக அவர்கள் பள்ளப்பட்டி பிரிவு என்ற இடத்தில் உள்ள பேக்கரி கடைக்கு சென்று அங்கு இருந்த மேஜை, நாற்காலிகளை சேதப்படுத்தி ரகளை செய்ததுடன், பட்டாகத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டியதாக கூறப்படுகிறது.
இது குறித்து அம்மையநாயக்கனூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் அவர்கள் ஆவரம்பட்டியை சேர்ந்தவர்கள் என்பதும், காரணமே இல்லாமல் அவர்கள் போதையில் ரகளை செய்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்