கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழகம் இந்தியாவுக்கே வழிகாட்டியாக திகழ்கிறது வைகோ பாராட்டு
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழகம் இந்தியாவுக்கே வழிகாட்டியாக திகழ்கிறது என்று வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார்
எட்டயபுரம்:
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் இந்தியாவுக்்கே தமிழகம் வழிகாட்டுகிறது என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பாராட்டினார்.
இதுகுறித்து அவர் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே நாகலாபுரத்ைத அடுத்த சங்கரலிங்கபுரத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தியாவுக்கு வழிகாட்டும் தமிழகம்
தமிழகத்தில் பா.ஜ.க. மாநில தலைவராக உள்ள அண்ணாமலை ஏற்கனவே கர்நாடக மாநிலத்தில் போலீஸ் அதிகாரியாக இருந்ததால், இன்னும் போலீஸ் பார்வையிலேதான் பேசி வருகிறார். அவருக்கு அரசியல் கொள்கைகள் பற்றி தெரியவில்லை.
குஜராத் மாநிலத்தில் அதானி துறைமுகத்தில் இருந்து போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இதுகுறித்து பா.ஜ.க. தலைவர்கள் எந்த ஒரு பதிலும் கூறவில்லை. குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களால் எப்படி பதில் கூற முடியும்?. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் இந்தியாவுக்கே வழிகாட்டும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.
தொண்டர்களின் விருப்பம்
என்னுைடய மகன் துரை வைகோ, ம.தி.மு.க. தொண்டர்களின் இல்லங்களில் நடந்த சுக துக்க நிகழ்ச்சிகளுக்கு சென்று வந்துள்ளார். மருத்துவ சிகிச்சைக்கும் உதவி செய்துள்ளார். எனக்கே தெரியாமல் பலருக்கும் உதவியுள்ளார். என்னுடைய மகனின் படத்தை எந்த நிகழ்ச்சியிலும் போடக்கூடாது என்று கட்சியினருக்கு அறிவுறுத்தி உள்ளேன். மீறினால் கட்சியை விட்டு நீக்குவேன் என்றும் கூறி உள்ளேன்.
சிலர் தங்களது வாரிசுகளை அரசியலில் புகுத்துகின்றனர். ஆனால் நான் வாரிசு அரசியலை ஊக்குவிக்காமல் தடுக்க முயன்றும், தொண்டர்கள் துரை வைகோவை எனக்கு பின்னர் கட்சியை வழிநடத்த அழைக்கின்றனர். தொண்டர்களின் விருப்பம் ஜனநாயக முறைப்படி நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக சங்கரலிங்கபுரத்தில் சமீபத்தில் இறந்த ம.தி.மு.க. நிர்வாகி எரிமலை வரதன் வீட்டுக்கு சென்று குடும்பத்தினருக்கு வைகோ ஆறுதல் கூறினார். எரிமலை வரதன் படத்துக்கும் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.