கோவில்பட்டி வடக்கு திட்டங்குளத்தில் ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் வலியுறுத்தல்
கோவில்பட்டி வடக்கு திட்டங்குளத்தில் ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஏராளமான பெண்கள் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கோரிக்கை மனு கொடுத்தனர்
தூத்துக்குடி:
கோவில்பட்டி வடக்கு திட்டங்குளத்தில் ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஏராளமான பெண்கள் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கோரிக்கை மனு கொடுத்தனர்.
மனு
தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மகளிர் திட்டம் திட்ட இயக்குனர் வீரபத்திரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் மனு கொடுத்தனர்.
சுத்திகரிப்பு ஆலை
தூத்துக்குடி மாநகர ம.தி.மு.க செயலாளர் முருகபூபதி மாவட்ட கலெக்டரிடம் கொடுத்த மனுவில், தூத்துக்குடி அருகே உள்ள அல்லிகுளம் ராமசாமிபுரம், கீழ தட்டப்பாறை, மேல தட்டப்பாறை, உமரிகோட்டை, பேரூரணி, தெற்கு சிலுக்கன்பட்டி ஆகிய கிராமப் பகுதிகளில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அந்த பகுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்பட்டால் காட்டாற்று ஓடை மறிக்கப்பட்டு மேல தட்டப்பாறை, கீழதட்டப்பாறை, தெற்கு சிலுக்கன்பட்டி, மறவன்மடம், அந்தோணியார் புரம், கோரம்பள்ளம் வழியாக தூத்துக்குடி புறநகர் மற்றும் மாநகர பகுதிகளுக்குள் மழை வெள்ளம் புகும் அபாயம் உள்ளது. ஆகையால் அந்தப் பகுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைப்பதை கைவிட்டு வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என்று கூறி உள்ளார்.
சமுதாய நலக்கூடம்
தூத்துக்குடி ராமதாஸ் நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்போர் நலச் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், நாங்கள் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்துக்கு உட்பட்ட ராமதாஸ் நகரில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் குடியிருந்து வருகிறோம். எங்கள் பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தை கடந்த 23 ஆண்டுகளாக சிறுவர்கள் விளையாடும் மைதானமாக பயன்படுத்தி வருகிறோம். இந்த இடத்தில் உள்ள பொது கிணற்றையும் பொதுமக்கள் பயன்படுத்தி வருகிறோம். தற்போது சில தனிநபர்கள் அந்த நிலத்தை தங்களுக்கு சொந்தமானது என்று கூறி வருகிறார்கள். ஆகையால் நாங்கள் பயன்படுத்தி வரும் 15 செண்ட் இடத்தை மீட்டு அதில் ஒரு சமுதாய நலக்கூடம் கட்டித் தருமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று கூறி உள்ளனர்.
சாலை பணிகள்
தூத்துக்குடி மாநகராட்சி 30- வது வார்டு அ.தி.மு.க செயலாளர் காசிலிங்கம், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜிடம் கொடுத்த மனுவில், தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட வி.வி.டி ரோட்டில் தினசரி பல விபத்துகள் நடந்து வருகிறது. இந்த ரோட்டில் ஸ்மார்ட் சிட்டி வேலைகள் நடந்து வருகின்றன. இந்த பணிகள் மிகவும் மெதுவாக தரமற்ற முறையில் நடந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆகையால் வி.வி.டி சாலைப் பணியை விரைவாக முடித்து பொதுமக்களுக்கு பாதுகாப்பு தரும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.
வீட்டுமனை
கோவில்பட்டி வடக்கு திட்ட குளத்தைச் சேர்ந்த சுமார் 50 பெண்கள் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், தங்கள் பகுதியில் ஏழை, எளிய மக்கள் வீட்டுமனை இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். ஆகையால் ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
குடிநீர் பிரச்சினை
குரும்பூர் அருகே உள்ள நாலுமாவடி சுந்தரராஜபுரத்தை சேர்ந்த பொதுமக்கள், ஊர் தலைவர் சுடலை தலைமையில் கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், நாங்கள் வசிக்கும் சுந்தரராஜபுரத்தில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் பிரச்சினை உள்ளது. எங்கள் பகுதிக்கு வரக்கூடிய குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாக செல்வதால், எங்களுக்கு குடிநீர் கிடைப்பதில் சிரமம் உள்ளது. இது தொடர்பாக பஞ்சாயத்து அலுவலகத்தில் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகையால் எங்கள் பகுதிக்கு வரும் குடிநீர் இணைப்பு குழாயை மாற்றி புதிய குழாய் அமைத்து தர வேண்டும். ஏற்கனவே இருந்த 2 அடிபம்புகள் பழுதடைந்து விட்டன. அதனையும் சரி செய்து தர வேண்டும் என்று கூறி உள்ளனர்.
ஏரலை சேர்ந்த பச்சை பெருமாள் என்பவர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில், ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீபராங்குசநல்லூர் கிராமம் தாமிரபரணி ஆற்றுப்படுகையில், சட்டவிரோதமாக ஆற்றுமணல், குறுமண், சவுடு மணல் அள்ளுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.
அனுமதி
அகிலபாரத இந்து சேனா மாநில துணைத்தலைவர் சுப்புராஜ் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில், குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா உலகப்புகழ் பெற்ற திருவிழா ஆகும். இந்த தசரா விழாவில் சமூக இடைவெளி விட்டு, முககவசம் அணிந்து, தடுப்பூசி போட்டதற்கான சான்றுகளுடன் வரும் பக்தர்களை தசரா பெருந்திருவிழா தரிசனத்துக்கு அனுமதிக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.
நிலம் ஆக்கிரமிப்பு
தமிழ்நாடு மக்கள் கட்சி மாநில தலைவர் காந்தி மள்ளர் மாவட்ட கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில், விளாத்திகுளம் தாலுகா கல்லூரணி கிராமத்துக்கு சொந்தமான நயினார் சத்திரம் மற்றும் விநாயகர் கோவில் உள்ளது. இந்த சத்திரத்துக்கு சொந்தமான நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர். இந்த நிலத்தை மீட்டு நயினார்சத்திரத்தை மீட்டு தர்ம காரியங்களை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் புன்னைக்காயல் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள செல்போன் டவரை அகற்ற கோரி மனு கொடுத்தனர்.