திருச்செந்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திருச்செந்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
திருச்செந்தூர்:
திருச்செந்தூரில் இருந்து நெல்லை செல்லும் சாலையில் உள்ள குரங்கன்தட்டு, நத்தகுளம், கோவில்விளை, காந்திபுரம் போன்ற கிராமங்களிலும், திருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடிக்கு செல்லும் சாலையில் உள்ள தண்ணீர்ப்பந்தல், நரசிங்கன்விளை ஆகிய கிராமங்களிலும், திருச்செந்தூரில் இருந்து நாகர்கோவில் செல்லும் சாலையில் உள்ள மேலமானாடு போன்ற கிராமங்களில் உள்ள பஸ் ஸ்டாப்புகளில் அனைத்து அரசு பஸ்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையம் முன்பு தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், திராவிட தமிழர் கட்சி அமைப்புச்செயலாளர் சங்கர், மகளிர் விடுதலை இயக்கத்தின் மாவட்ட துணை செயலாளர் தமிழ்ச்செல்வி, தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் ராஜ்குமார், கருத்தியல் பரப்பு மாநில துணை செயலாளர் தமிழ் குட்டி, சமூக நல்லிணக்க பேரவை மாவட்ட அமைப்பாளர் தமிழ்ப்பரிதி, மாவட்ட செய்தி தொடர்பு மையம் மாவட்ட அமைப்பாளர் வேம்படிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.