கடப்பாக்கம் இ.சி.ஆர். சாலையில் விபத்து: கார்-மொபட் மோதல்; போலீஸ் ஏட்டு பலி
கடப்பாக்கம் இ.சி.ஆர். சாலையில் கார் மோதிய விபத்தில் மொபட்டில் வந்த போலீஸ் ஏட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.
போலீஸ் ஏட்டு பலி
செங்கல்பட்டு மாவட்டம், இடைக்கழி நாடு பேரூராட்சிக்குட்பட்ட கப்பிவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மகன் ரவீந்தரன் (வயது 49). இவர் மதுராந்தகம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்தார்.இந்த நிலையில் இ.சி.ஆர். சாலை ரோந்து போலீசாக பணிபுரிந்து வந்த ரவீந்தரன் நேற்று மாலை பணி முடிந்து கடப்பாக்கத்தில் இருந்து மொபட்டில் வீட்டிற்கு செல்லும் போது, கப்பிவாக்கம் இ.சி.ஆர்.சாலையில் குறுக்கே திரும்பியுள்ளார்.அப்போது கடலூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார், அவர் வந்த மொபட்டின் மீது மோதியதில் பலத்த காயமடைந்த ரவீந்தரன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
சாலை மறியல்
இதையறிந்த சூணாம்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரவீந்தரன் உடலை கைப்பற்றி மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்துக்கு காரணமானவர்களை கைது செய்ய கோரி கப்பிவாக்கம் கிராம மக்கள் இ.சி.ஆர்.சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது, இங்கு அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும், இ.சி.ஆர். சாலையில் விபத்துகளை தடுக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர். இந்த விபத்து குறித்து சூணாம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.