நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை தாலுகா விராலிப்பட்டி ஊராட்சியில் உள்ள சாமியார் மூப்பனூர் கிராமத்தில் 160 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் நிலத்தகராறு காரணமாக இரு தரப்பினருக்கு இடையே முன்விரோதம் உள்ளது. இதையடுத்து கிராமத்தில் உள்ள 20 குடும்பத்தினரை ஒதுக்கி வைத்து விட்டு மற்றவர்கள் அங்குள்ள செல்லாயி அம்மன் கோவிலில் இன்று (செவ்வாய்க்கிழமை) திருவிழா நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து 20 குடும்பத்தை சேர்ந்தவர்கள் நேற்று நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுத்தனர். அதில், வெளியூர்களில் இருந்து ஆட்களை கொண்டு வந்து 20 குடும்பத்தில் உள்ள ஆண்களை தாக்க திட்டமிட்டு உள்ளனர். எனவே எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இதைத்தொடர்ந்து அவர்கள் நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்துக்கு சென்று அங்கு போலீஸ் துணை சூப்பிரண்டு சுகுமாரனிடம் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்தனர். அப்போது அவர்கள் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால் தீக்குளிப்போம் என கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸ் துணை சூப்பிரண்டு அவர்களிடம், உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தார். பின்னர் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.