கடையம் அருகே தோட்டங்களில் புகுந்து யானைகள் அட்டகாசம்
தோட்டங்களில் புகுந்து யானைகள் அட்டகாசம்
கடையம், அக்.11-
கடையம் அருகே தோட்டங்களில் யானைகள் புகுந்து தென்னை, வாழைகளை பிடுங்கி வீசி அட்டகாசம் செய்தன.
விவசாய பயிர்கள்
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்டது கடையம் வனச்சரகம்.
இந்த வனச்சரகத்திற்கு உட்பட்ட தோரணமலை, கடவக்காடு, திரவிய நகர், மத்தளம்பாறை ஆகிய மலையடிவார கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இவற்றில் விவசாயிகள் நெல், தென்னை, வாழை, மா, பலா உள்ளிட்டவை பயிரிட்டு வளர்த்து வருகின்றனர்.
யானைகள் அட்டகாசம்
இந்தநிலையில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக 8 யானைகள் அடங்கிய கூட்டம் அந்தப் பகுதியில் முகாமிட்டுள்ளன. மத்தளம்பாறையில் இருந்து கடையம் வரை மலையடிவாரத்தில் அமைந்துள்ள தோட்டங்களில் யானைகள் புகுந்து தென்னை, வாழை மரங்களைப் பிடுங்கி நாசப்படுத்தி அட்டகாசம் செய்து வருகின்றன.
கடந்த சில நாட்களுக்கு முன் ஆரியங்காவூர் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவரது தோட்டத்தில் நுழைந்த யானைக்கூட்டம் 20 தென்னை மரங்கள் மற்றும் 50 வாழை மரங்களை பிடுங்கி நாசப்படுத்தின. இது குறித்து வனத்துறையினரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தென்னை மரங்களை பிடுங்கி வீசின
இந்த நிலையில் நேற்றும் அவரது தோட்டத்தில் புகுந்த யானைக்கூட்டம் 10-க்கும் மேற்பட்ட தென்னை மற்றும் 30-க்கும் மேற்பட்ட வாழை மரங்களையும் சாய்த்து நாசப்படுத்தின.
மேலும் அருகிலுள்ள மற்றொரு தோட்டத்தில் புகுந்து 20-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களையும் சாய்த்து நாசப்படுத்திச் சென்றன.
இதுபற்றி கடையம் வனச்சரகத்தில் மனு கொடுத்தனர். இதையடுத்து வேட்டை தடுப்புக்காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு பட்டாசு வெடித்து யானைகளை விரட்டினர்.
..