சிறப்பு முகாமில் 90,694 பேருக்கு கொரோனா தடுப்பூசி

சிறப்பு முகாமில் 90,694 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது

Update: 2021-10-10 20:41 GMT
திருச்சி
திருச்சி மாவட்டத்தில் கடந்த 4 வாரங்களாக மாபெரும் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன. நேற்று 5-வது வாரமாக மாபெரும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அதன்படி, திருச்சி மாநகரில் 198 இடங்களிலும், 2 நடமாடும் குழுக்கள் மூலமும், ஊரக பகுதிகளில் 418 இடங்களிலும் இந்த முகாம் நடைபெற்றது. காலை முதலே பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு தடுப்பூசிகளை போட்டுச் சென்றனர். திருச்சி வயலூர் சாலையில் உள்ள பிஷப்ஹீபர் கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் தடுப்பூசி முகாமை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டார். அப்போது பணியின்போது, மரணம் அடைந்த அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களின் வாரிசுதாரர்கள் 4 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை அமைச்சர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு, மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான் உள்பட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர். இந்தநிலையில் நேற்று மட்டும் திருச்சி மாவட்டத்தில் இரவு 7.30 மணி நிலவரப்படி 46 ஆயிரத்து 228 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 44 ஆயிரத்து 466 பேர் 2-வது தவணை தடுப்பூசியும் என்று மொத்தம் 90 ஆயிரத்து 684 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். தமிழக அளவில் நேற்று நடைபெற்ற முகாம்களில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் எண்ணிக்கையில் திருச்சி மாவட்டம் 4-வது இடத்தை பெற்றுள்ளது.

மேலும் செய்திகள்