ஒரே நாளில் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
குமரி மாவட்டத்தில் நேற்று நடந்த 570 மெகா தடுப்பூசி முகாம்களில் 50 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் 22 பேருக்கு வருகிற 13-ந் தேதி தங்க நாணயம் பரிசு வழங்கப்படுகிறது.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் நேற்று நடந்த 570 மெகா தடுப்பூசி முகாம்களில் 50 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் 22 பேருக்கு வருகிற 13-ந் தேதி தங்க நாணயம் பரிசு வழங்கப்படுகிறது.
மெகா தடுப்பூசி முகாம்
குமரி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க தினமும் முகாம்கள் நடத்தப்பட்டு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. மாவட்டத்தில் இதுவரை 13 லட்சத்து 1849 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாத நபர்களை தடுப்பூசி செலுத்திக் கொள்ள தூண்டும் வகையில் பரிசுத் திட்டத்துடன் கூடிய மெகா தடுப்பூசி முகாம்கள் நேற்று நடத்தப்பட்டது.
அதாவது தடுப்பூசி போடும் நபர்களில் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் இருந்தும் 2 பேர் வீதம் 9 ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் இருந்து 18 பேரும், நாகர்கோவில் மாகராட்சிப் பகுதியில் இருந்து 2 பேரும், மாவட்ட அளவில் 2 பேரும் என மொத்தம் 22 பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தலா ஒரு கிராம் எடையுள்ள தங்க நாணயம் வழங்கப்படும் என்று கலெக்டர் அரவிந்த் அறிவித்து இருந்தார்.
அதன்படி 1 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் இலக்குடன் நேற்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை குமரி மாவட்டத்தில் 570 இடங்களில் நேற்று மெகா தடுப்பூசி முகாம்கள் நடந்தது. இதில் நாகர்கோவில் மாநகராட்சிப் பகுதியில் மட்டும் 120 மெகா தடுப்பூசி முகாம்கள் நடந்தப்பட்டன.
கலெக்டர் ஆய்வு
ஆரல்வாய்மொழி பேரூராட்சிக்கு உட்பட்ட வடக்கூர் அரசு மேல்நிலைப்பள்ளி, தாணுமாலயன்புதூர் அரசு தொடக்கப்பள்ளி போன்ற இடங்களில் நடந்த தடுப்பூசி முகாமை மாவட்ட கலெக்டர் அரவிந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் அதிகாரிகளிடம் இன்னும் தடுப்பூசி போடாத நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி முழுமையாக போட வேண்டும் என அறிவுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் ஆரல்வாய்மொழி பேரூராட்சி செயல் அலுவலர் திலகராஜ், ஆரல்வாய்மொழி மருத்துவ அலுவலர் டாக்டர் வள்ளியம்மாள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராமகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் அன்வர் அலி, வருவாய் ஆய்வாளர் தேன்மொழி, கிராம நிர்வாக அலுவலர் பாத்திமாஷீபா மற்றும் சுகாதார செவிலியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.இதேபோல தோவாளை அரசு மேல்நிலைப்பள்ளி, பீமநகரி பஞ்சாயத்துக்கு உட்பட்ட வெள்ளமடம் அரசு உயர்நிலைப் பள்ளி போன்ற இடங்களில் நடந்த முகாம்களையும் கலெக்டர் ஆய்வு செய்தார். நிகழ்ச்சியில், தோவாளை ஊராட்சி தலைவர் நெடுஞ்செழியன், துணைத் தலைவர் தாணு, பீமநகரி பஞ்சாயத்து தலைவர் சஜிதா சுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
50 ஆயிரம் பேர்
இந்த மெகா தடுப்பூசி முகாம்கள் மூலமாக மாவட்டம் முழுவதும் 50 ஆயிரம் பேர் நேற்று ஒரே நாளில் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். அவர்களில் 6 ஆயிரம் பேர் நாகர்கோவில் மாநகராட்சிப் பகுதியில் மட்டும் தடுப்பூசி செலுத்தியிருந்தனர். தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் 22 பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு 13-ந் தேதி தங்க நாணயம் பரிசாக அளிக்கப்படுகிறது.