குமரியில் 22 இடங்களில் பா.ஜனதாவினர் மறியல்
முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கைதை கண்டித்து குமரி மாவட்டத்தில் 22 இடங்களில் பா.ஜனதாவினர் மறியல் போராட்டம் நடத்தினர். இதில் பெண்கள் உள்பட 900 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாகர்கோவில்,
முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கைதை கண்டித்து குமரி மாவட்டத்தில் 22 இடங்களில் பா.ஜனதாவினர் மறியல் போராட்டம் நடத்தினர். இதில் பெண்கள் உள்பட 900 பேர் கைது செய்யப்பட்டனர்.
பா.ஜனதா மறியல்
நெல்லை மாவட்டம் வள்ளியூர் ஒன்றிய பா.ஜனதா நிர்வாகி தாக்கப்பட்டார். உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நடந்த தகராறில் தி.மு.க.வை சேர்ந்த ஞானதிரவியம் எம்.பி. உள்ளிட்டோர் தாக்கியதாக புகார் கூறப்பட்டது.
இதனை தொடர்ந்து தி.மு.க. எம்.பி.யை கைது செய்யக்கோரி முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்றுமுன்தினம் நள்ளிரவில் நெல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டார். உடனே அவரை போலீசார் கைது செய்தனர். இந்தநிலையில் பொன்.ராதாகிருஷ்ணன் கைதை கண்டித்தும், பா.ஜனதா நிர்வாகியை தாக்கிய தி.மு.க. எம்.பி. மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் குமரி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் நேற்று பா.ஜனதாவினர் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.
நாகர்கோவிலில்...
நாகர்கோவில் வடசேரி சந்திப்பு பகுதியில் நடந்த மறியல் போராட்டத்துக்கு மாவட்ட துணைத்தலைவர் தேவ் தலைமை தாங்கினார். மாநகர மண்டல தலைவர்கள் நாகராஜன், அஜித்குமார், ராகவன், சிவபிரசாத் ஆகிேயார் முன்னிலை வகித்தனர். மாவட்ட பா.ஜனதா தலைவர் தர்மராஜ் மறியல் போராட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட பொருளாளர் முத்துராமன், முன்னாள் நகரசபை தலைவர் மீனாதேவ், மாநில நிர்வாகி உமாரதி மற்றும் ஜெரோம், ஜெயராம், சண்முகவடிவு, உஷா, சரோஜினி, ரமணி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழக அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். இந்த சாலை மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 13 பெண்கள் உள்பட 74 பேரை போலீசார் கைது செய்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து வாகனத்தில் ஏற்றிக் கொண்டிருந்தபோது, வடசேரி சந்திப்பு பகுதியில் நின்று கொண்டிருந்த பா.ஜனதா கட்சியை சேர்ந்த சிலர் திடீரென தாங்கள் வைத்திருந்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவ பொம்மையை தீயிட்டு கொளுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் தீயை அணைத்து உருவ பொம்மையை பறித்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
குளச்சல்
குளச்சல் ஆலுமூடு சந்திப்பில் நடந்த போராட்டத்தில் மாநில பிரசார அணி செயலாளர் சதீஷ்பாரதி, மாவட்ட வர்த்தகர் பிரிவு செயலாளர் ஜஸ்டின் செல்வகுமார், முன்னாள் கவுன்சிலர் முருகன், நகர முன்னாள் தலைவர் பிரதீப்குமார், துணைத்தலைவர்கள் பகவதியப்பன், அல்போன்ஸ், மீனவர் அணி சேவியர், ஜெயசீலன், அந்தோணியடிமை உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
குழித்துறையில் நடந்த போராட்டத்துக்கு நகர தலைவர் ரத்னமணி தலைமை தாங்கினார். இதில், மாவட்ட பொதுச் செயலாளர் சுரேஷ், முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர் ராஜசேகர், குழித்துறை நகர பொதுச் செயலாளர்கள் விஜூ, சுமன், ஐ.டி.பிரிவு மாவட்ட செயலாளர் ஹரிராம் உள்பட தொண்டர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் கலந்து கொண்ட 50 பேர் கைது செய்யப்பட்டு குழித்துறையில் உள்ள ஒரு திருமணமண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
மேல்புறம் கிழக்கு ஒன்றிய பா.ஜனதா தலைவர் சேகர் தலைமையில் மேல்புறம் சந்திப்பில் மறியலில் ஈடுபட்ட 110 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கடை
முன்சிறை ஒன்றிய பா.ஜனதா சார்பில் புதுக்கடை பஸ்நிலையம் முன் நடந்த போராட்டத்துக்கு ஒன்றிய தலைவர் குமார் தலைமை தாங்கினார். இதில், பைங்குளம் முன்னாள் ஊராட்சி தலைவர் சந்திரகுமார், முன்சிறை ஊராட்சி ஒன்றிய குழு தலைவி ராஜேஸ்வரி, பைங்குளம் ஊராட்சி தலைவர் விஜயராணி, விளாத்துறை ஊராட்சி தலைவர் ஓமனா, துணைத் தலைவர் சிவகுமார், பைங்குளம் ஊராட்சி துணைத் தலைவி மேரி, முன்சிறை ஒன்றிய மகளிரணி தலைவி தங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 61 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் துவரங்காடு, ஆரல்வாய்மொழி சந்திப்பு, தக்கலை பஸ் நிலையம் முன்பு, திக்கணங்கோடு ரோடு சந்திப்பு, அருமனை, சாமியார்மடம், மார்த்தாண்டம் புதிய பஸ் நிலையம், குலசேகரம் மார்க்கெட் ரோடு சந்திப்பு, படந்தாலுமூடு சந்திப்பு, கருங்கல் பஸ் நிலையம், குருந்தங்கோடு சந்திப்பு, இரணியல் சந்திப்பு, கொட்டாரம் சந்திப்பு, தெங்கம்புதூர் சந்திப்பு, ராஜாக்கமங்கலம் சந்திப்பு, மயிலாடி சந்திப்பு என மாவட்டம் முழுவதும் மொத்தம் 22 இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது.
900 பேர் கைது
அந்த வகையில் மொத்தம் மறியலில் ஈடுபட்டதாக 119 பெண்கள் உள்பட 900 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.