பா.ஜனதா நிர்வாகியை தாக்கியதாக பொன்.ராதாகிருஷ்ணன் போராட்டம்: நெல்லை தி.மு.க. எம்.பி. உள்பட 30 பேர் மீது வழக்கு

நெல்லை தி.மு.க. எம்.பி. உள்பட 30 பேர் மீது வழக்கு

Update: 2021-10-10 20:20 GMT
நெல்லை:
பா.ஜனதா நிர்வாகியை தாக்கியதாக நெல்லை தி.மு.க. எம்.பி. உள்பட 30 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பா.ஜனதா நிர்வாகி மீது தாக்குதல்
நெல்லை மாவட்டம் வள்ளியூர் வட்டார பா.ஜனதா கட்சி நிர்வாகி பாஸ்கர். இவர் ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஆவரைகுளம் பஞ்சாயத்தில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ததாக கூறப்படுகிறது. 
இதுதொடர்பாக பாஸ்கருக்கும், தி.மு.க.வினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாஸ்கர் காவல்கிணறு பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது சிலர் பாஸ்கரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவர் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 
பொன்.ராதாகிருஷ்ணன் போராட்டம்
இதையடுத்து முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று முன்தினம் மாலை ஆஸ்பத்திரிக்கு சென்று பாஸ்கரிடம் நலம் விசாரித்தார். 
பின்னர் இரவு 10.30 மணி அளவில் நெல்லை சந்திப்பு பாரதியார் சிலை முன்பு அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். பா.ஜனதா நிர்வாகியை தாக்கிய தி.மு.க. எம்.பி. ஞானதிரவியம் உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிந்து கைது செய்ய வேண்டும் என்று கூறி அவர் போராட்டத்தில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக பா.ஜனதாவினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இதையடுத்து நள்ளிரவில் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்து சந்திப்பு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர் இரவில் தரையில் படுத்துக்கொண்டார். போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி காலையில் விடுவித்தனர்.
தி.மு.க. எம்.பி. மீது வழக்கு
இதற்கிடையே, பாஸ்கர் தாக்கப்பட்டது தொடர்பாக, ஞானதிரவியம் எம்.பி., அவரது மகன்கள் உள்பட 30 பேர் மீது பணகுடி போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் செய்திகள்