மக்களை சந்திக்க வேண்டிய நேரத்தில் விஜயகாந்த் சந்திப்பார்
மக்களை சந்திக்க வேண்டிய நேரத்தில் விஜயகாந்த் சந்திப்பார் என விஜயபிரபாகரன் கூறினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூரில் தே.மு.தி.க. சார்பில் நடைபெற்ற நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் கலந்துகொண்டு, உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- தே.மு.தி.க. எழுச்சியோடு செயல்படுகிறது. வெற்றி, தோல்வி என்பது வந்து போகும். மீண்டும் தே.மு.தி.க.வை தூக்கி நிறுத்துவோம். மக்கள் எங்களை தேர்தல் நேரத்தில் அங்கீகரிக்காததால் தேர்தலில் தோல்வியுற்றோம். எங்கள் கட்சியின் வாக்கு சதவீதம் அப்படியே உள்ளது. தொண்டர்கள் அப்படியேதான் இருக்கிறார்கள். வருங்காலத்தில் தே.மு.தி.க. ஆரம்பித்ததன் லட்சியத்தை நோக்கி பயணிப்போம்.
தி.மு.க.வுடன் கூட்டணியா? என்பது குறித்து காலம்தான் பதில் சொல்லும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்ல திட்டங்களை கொண்டு வந்து சிறப்பாக ஆட்சி செய்கிறார்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நலமாக உள்ளார். அவர் பழைய நிலைக்கு திரும்ப இன்னும் கொஞ்ச நாள் ஆகும். மக்களை சந்திக்க வேண்டிய நேரத்தில் விஜயகாந்த் சந்திப்பார்.
இவ்வாறு விஜயபிரபாகரன் கூறினார்.