தினத்தந்தி புகார் பெட்டி
'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-;
தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் மருவத்தூர் கிராமத்தில் கொசு அதிகமாக உள்ளது என தினதந்தி புகார் பெட்டி பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுத்து மருவத்தூர் கிராமத்தில் கொசு மருந்து அடித்தனர். இப்போது கொசுத்தொல்லை இல்லை என தெரிவித்த பொதுமக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர் .
பொதுமக்கள், மருவத்தூர், பெரம்பலூர்.
பன்றிகளால் சுகாதார சீர்கேடு
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியம், குமாரமங்கலம் ஊராட்சி ராமசாமி நகர், சக்தி நகர், அபிராமி நகர், அண்ணாநகர் பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இப்பகுதியில் அதிக அளவில் பன்றிகள் சுற்றி வருவதினால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
காசிராஜன், குமாரமங்கலம், புதுக்கோட்டை.
சேறும், சகதியுமான சாலை
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் தாலுகா பாப்பாக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட தெற்கு காட்டூர் முருகன் கோவில் தெரு 61 வார்டு பகுதியில் 600-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த தெரு சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் தற்போது பெய்த மழையில் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகளும், நடந்து செல்லும் பொதுமக்களும் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
அ.முகமது ராவுத்தர், காட்டூர் , திருச்சி.
வடிகால் வசதி ஏற்படுத்தப்படுமா?
திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம், கள்ளிக்குடி கிராமம் வடக்கு தெருவில் முறையான வடிகால் வசதி இல்லாததால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சி அளிக்கிறது. இதில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதியில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வடிகால் வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
வசந்தா, கள்ளிக்குடி, திருச்சி.
சாலையோரத்தில் கொட்டப்படும் குப்பைகளால் துர்நாற்றம்
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணம் கிராமம் பழைய காலனி பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பழைய காலனி சாலையில் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டு குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மேலும் சாலையை கருவேல மரங்கள் சூழ்ந்தும், சாலை ஓரங்களில் குப்பைகள் குவிந்தும் காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், கொசுத்தொல்லையும் அதிகரித்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
அசாருதீன், கோபாலப்பட்டிணம், புதுக்கோட்டை.
பாதாள சாக்கடையின் மூடி மாற்றப்படுமா?
திருச்சி தாரநல்லூர் பூக்கொல்லை தெரு அரியமங்கலம் கோட்டம், 14வது வார்டு பகுதியில் அமைந்துள்ள ஜின்னா திடல் பகுதியில் கடந்த நான்கு மாதமாக சாலையின் நடுவில் பாதாள சாக்கடையின் மேல் போடப்பட்டுள்ள மேல்மூடி தகரம் உடைந்துள்ளது. இரவு நேரத்தில் இந்த உடைப்பு தெரியாமல் இருசக்கர வாகன ஓட்டிகள் இதில் வாகனத்தை விட்டு கீழே விழுந்த காயம் அடைகின்றனர். எனவே இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரிசெய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சையது முஸ்தபா, பூக்கொல்லை தெரு, திருச்சி.
குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் குடிநீர்
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை காமராஜர் பகுதியில் ஜல்லிக்கட்டு காளை சிலை அருகில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் போதிய குடிநீர் கிடைக்காமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், விராலிமலை, புதுக்கோட்டை.
பயன்பாட்டிற்கு வராத கழிப்பறை
கரூர் பஸ்நிலையத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்களின் பயன்பாட்டிற்காக பஸ் நிலையத்தில் புதிதாக கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. ஆனால் இந்த கழிப்பறையின் பணிகள் அனைத்து முடிந்த நிலையில் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சரவணன், கரூர்.
சாலையின் நடுவே உள்ள மின்கம்பம்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சின்னவளையம் அரங்கனேரி எதிரே உள்ள சாலையின் நடுவே மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் கவனக்குறைவால் விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
ஆறுமுகம், சின்னவளையம், அரியலூர்.
சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் பாதசாரிகள் அச்சம்
திருச்சி மாவட்டம் எடமலைபட்டி ரோடு எம்.ஜி.ஆர். மன்றம் அருகில் ஏராளமான மாடுகள் சுற்றித்திரிவதால் அந்த வழியாக நடந்து செல்லும், பெண்கள் மற்றும் முதியவர்கள் அச்சத்துடனே சென்று வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
ஹரிஹரன், திருச்சி.
வாய்க்கால்கள் தூர்வாரப்படுமா?
திருச்சி மாவட்டம், அல்லித்துறை, கீழசவேரியார்புரம் பாசன மற்றும் வடிகால் வாய்க்கால் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் ஆங்காங்கே மழைநீர் தேங்கி நிற்கிறது. மேலும் மழைநீர் செல்ல வழியின் அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குள் மழைநீர் புகுந்து விடுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
ஸ்டேன்லி சேசு ராஜ், அல்லித்துறை, திருச்சி.
கல்லுப்பட்டியில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும்
திருச்சி மாவட்டம், மருங்காபுரி தாலுகா, கல்லுப்பட்டியில் வட்டாட்சியர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம், வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகம், உதவி மின்பொறியாளர் அலுவலகம் உள்ளிட்ட பல அரசு அலுவலகங்களும், சுமார் 10க்கும் மேற்பட்ட சாலையோர உணவகங்களும் உள்ளன. இதனால் இப்பகுதி எப்பொழுதும் மக்கள் நடமாட்டமும், இருசக்கர வாகன பயன்பாடும் மிகுந்து காணப்படுகிறது. எனவே இப்பகுதியில் குற்ற செயல்கள் நடக்காமல் இருக்க கல்லுப்பட்டியில் புறக்காவல் நிலையம் அமைக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
கல்லைவெங்கட், திருச்சி.