வருகிற 21-ந் தேதி உள்ளாட்சி அமைப்பு அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
துப்புரவு பணியாளர்களின் சம்பளம் பாதியாக குறைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற 21-ந் தேதி உள்ளாட்சி அமைப்பு அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று ஏ.ஐ.டி.யு.சி. மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஊத்துக்குளி
துப்புரவு பணியாளர்களின் சம்பளம் பாதியாக குறைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற 21-ந் தேதி உள்ளாட்சி அமைப்பு அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று ஏ.ஐ.டி.யு.சி. மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாநில பொதுக்குழு கூட்டம்
ஊத்துக்குளி அருகே உள்ள செங்கப்பள்ளியில் செயல்படும் தனியார் திருமண மண்டபத்தில் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. தலைவர் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி சுப்பராயன் எம்.பி., தலைமை தாங்கினார். அறிக்கையை மாநில பொதுச் செயலாளர் மூர்த்தி தாக்கல் செய்தார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆறுமுகம், பெரியசாமி, தேசிய செயலாளர் வகிதா நிஜாம், மாநில செயலாளர்கள் சந்திரகுமார், ஆறுமுகம், சின்னச்சாமிராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 150 பேர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
உள்ளாட்சிகளில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்களுக்கு நிரந்தர தொழிலாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். துப்புரவு தொழிலாளர்கள் வாங்கிவந்த சம்பளம் பாதியாக குறைந்துள்ளது கண்டனத்துக்கு உரியது ஆகும்.இதற்கு காரணமான அரசு அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்தி வரும் 21-ந் தேதி மாநகராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்துவது.
போராட்டம்
மக்களின் வரிப்பணத்திலிருந்து கடந்த 75 ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை பண மயமாக்கல் என்ற பெயரால் உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு ரூ.6 லட்சம் கோடிக்கு விற்றுள்ளது. எனவே பணமாக்கல் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி, அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து போராடுவது.
கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். ரெயில்வேயில் உள்ள ஒரு கோடி பணியிடங்களை நிரப்பி இளைஞர்களுக்கு வாழ்வளிக்க வேண்டும், ஓசூரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையை மேம்படுத்தி பல்நோக்கு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.