கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் மழையில் நனைந்து முளைக்கும் நெல்மணிகள் விவசாயிகள் வேதனை

கறம்பக்குடி அருகே கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் மழையில் நனைந்து நெல்மணிகள் முளைக்க தொடங்கி உள்ளன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.

Update: 2021-10-10 17:56 GMT
கறம்பக்குடி:
நெல் கொள்முதல் நிலையம்
கறம்பக்குடி அருகே குரும்பிவயல் கிராமம் உள்ளது. இப்பகுதியில் சுமார் 250 ஏக்கர் குறுவை சாகுபடி செய்யப்பட்டு அறுவடை பணிகள் தொடங்கி நிறைவடையும் நிலையில் உள்ளது. இங்கு அறுவடை செய்த நெல்லை அப்பகுதி விவசாயிகள் ஏற்கனவே கடந்த 2 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த நெல் கொள்முதல் நிலையம் அமைந்துள்ள பகுதியில் கொண்டு வந்து குவியலாக்கி வைத்து உள்ளனர். 
கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக காத்திருத்தும் நெல் கொள்முதல் நிலையம் இன்னும் திறக்கப்படவில்லை. இதனால் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கறம்பக்குடி தாலுகா அலுவலகம் முன்பு விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் நடத்த போவதாக அறிவித்திருந்தனர். அப்போது பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் 2 நாட்களில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். ஆனால் கொள்முதல் நிலையத்தை திறப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. 
முளைக்கும் நெல் மணிகள்
இதனால் நெல் கொள்முதல் நிலையத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ள நெல் மணிகள் மழையில் நனைந்து முளைக்க தொடங்கி உள்ளன. இதை பார்த்து விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர். இதுகுறித்து குரும்பிவயல் பகுதி விவசாயிகள் கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளாக செயல்பட்ட நெல் கொள்முதல் நிலையத்தை திறக்காமல், வேறு கொள்முதல் நிலையத்திற்கு நெல் மணிகளை கொண்டு செல்ல அதிகாரிகள் வற்புறுத்துகின்றனர். 
இதில் தேவையற்ற சச்சரவுகளும், மோதல்களும் உருவாகும் என விளக்கம் அளித்தும் அலட்சியம் காட்டுவது வேதனையாக உள்ளது. சுமார் 500 மூட்டை அளவிலான நெல்மணிகள் மழையில் நனைந்து வீணாகின்றன. விவசாயிகள் சம்பா சாகுபடி பணியை தொடங்காமல் கொள்முதல் நிலையத்திலேயே காத்திருக்க வேண்டி உள்ளது. எனவே அதிகாரிகள் உறுதி அளித்தபடி குரும்பி வயலில் நெல் கொள்முதலை உடனே தொடங்க வேண்டும். இல்லையேல் தாலுகா அலுவலகத்திற்கு நெல் மணிகளை கொண்டு சென்று சாலையில் கொட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்