வார விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் பரிசலில் சென்று மகிழ்ந்தனர்
வார விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் பரிசலில் சென்று மகிழ்ந்தனர்.
பென்னாகரம்:
வார விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் பரிசலில் சென்று மகிழ்ந்தனர்.
சுற்றுலா தலம்
தமிழகத்தில் புகழ்பெற்ற சுற்றுலா தலமான தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். அவர்கள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்வார்கள். கொரோனா கட்டுப்பாடு காரணமாக கடந்த 6 மாதத்திற்கு மேலாக ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் கடந்த வாரம் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வர தடை நீக்கப்பட்டது. இதனால் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனிடையே நேற்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நீர்வரத்தை பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
இதனிடையே நேற்று வார விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர். அவர்கள் தடையை மீறி மெயின் அருவி மற்றும் காவிரி கரையோரங்களில் குளித்து மகிழ்ந்தனர். மேலும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு உடை அணிந்து காவிரி ஆற்றில் பரிசலில் சென்று மகிழ்ந்தனர்.
பின்னர் அவர்கள் குடும்பத்தினர், நண்பர்களுடன் முதலை பண்ணை, சிறுவர் பூங்கா, தொங்குபாலம் உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்தனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் கடைகள், ஓட்டல்களில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.
நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் பரிசல் ஓட்டிகள், மசாஜ் தொழிலாளர்கள், சமையல் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.