நாமக்கல் மாவட்டத்தில் 5-வது கட்ட சிறப்பு முகாம்: 50,568 பேருக்கு கொரோனா தடுப்பூசி-சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று 5-வது கட்டமாக நடைபெற்ற சிறப்பு முகாமில் 50,568 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாமக்கல்:
50,568 பேருக்கு தடுப்பூசி
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 4 கட்டமாக மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளது. இவற்றில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டு உள்ளனர். 5-வது கட்டமாக நேற்று அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகள் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள் மற்றும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் உள்ள 650 நிலையான முகாம்கள் மூலமாகவும், 100 நடமாடும் குழுக்கள் மூலமாகவும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதில் 50 ஆயிரத்து 568 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
இந்த பணிகளில் 210 டாக்டர்கள், 430 செவிலியர்கள், 1,600 அங்கன்வாடி பணியாளர்கள், 1,400 தன்னார்வலர்கள், 415 பயிற்சி செவிலியர்கள் மற்றும் 265 பயிற்சி சுகாதார ஆய்வாளர்கள் ஈடுபட்டனர்.
கலெக்டர் பார்வையிட்டார்
நாமக்கல் நகராட்சி திருமண மண்டபம், கொசவம்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி, அலங்காநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அலங்காநத்தம் ஊராட்சி அங்கன்வாடி மையம், பொட்டிரெட்டிபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, காவக்காரப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, போடிநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, எஸ்.பழையபாளையம் ஊராட்சி நூலக கட்டிடம், வடுகப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பரட்டையகவுண்டன்புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, காந்திபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, துத்திக்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, சிங்களாந்தபுரம் அரசினர் மேல்நிலைப்பள்ளி, போடிநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கல்யாணி அரசு தொடக்கப்பள்ளி, காதப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய இடங்களில் தடுப்பூசி முகாமை கலெக்டர் ஸ்ரேயாசிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
101 வயது மூதாட்டிக்கு பாராட்டு
கல்யாணி ஊராட்சியில் கிழக்குகாட்டூர் கிராமத்தில் கலெக்டர் வீடு, வீடாக சென்று அனைவரும் தடுப்பூசி போட்டுள்ளனரா? என்று கேட்டறிந்தார். அப்போது வள்ளியம்மாள் என்கிற 101 வயது மூதாட்டியிடம் உங்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளதா? என்று கேட்டார். அதற்கு அவர் தடுப்பூசி போட்டுக்கொண்டேன் என்று கூறினார்.
மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக 101 வயதிலும் தடுப்பூசி போட்டுக்கொண்ட வள்ளியம்மாள் மற்றும் அவரது குடும்பத்தினரை கலெக்டர் பாராட்டினார். மேலும் இந்த வயதிலும், தனது வேலைகள் மற்றும் வீட்டின் வேலைகளை செய்துக்கொண்டு இருப்பதை பார்த்து அவரது பணி ஆர்வம் குறித்து குடும்பத்தினருடன் கலெக்டர் கலந்துரையாடினார். ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், குணாளன், புஷ்பராஜ், பாஸ்கரன், வரதராஜன், சரவணன், அருளாலன், தமிழரசி, தாசில்தார்கள் சுரேஷ், கார்த்திகேயன் உள்பட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.