5-வது கட்டமாக நடந்த முகாமில் 80 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது
திருவண்ணாமலை மாவட்டத்தில் 5-வது கட்டமாக நடந்த முகாமில் 80 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் 5-வது கட்டமாக நடந்த முகாமில் 80 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
1,075 இடங்களில் தடுப்பூசி முகாம்
கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாநிலம் முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்ட தகுதியுடைய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்திட அனைத்துத்துறையின் ஒருங்கிணைப்புடன் கடந்த செப்டம்பர் மாதம் 12-ந்தேதி முதல் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது.
தொடர்ந்து 5-வது வாரமாக நேற்று திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் 1,075 இடங்களில கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டது.
மாவட்டத்தில் இதுவரை 57 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டு உள்ளனர். 18 வயதிற்கு மேல் தகுதியுடையவர்கள் முதல் தவணை மற்றும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளும் வகையில் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு இருந்தது.
திருவண்ணாமலை வேங்கிக்கால் ஊராட்சியில் கலெக்டர் அலுவலக பஸ் நிறுத்தம் எதிரில் மற்றும் வேங்கிக்கால் ஊராட்சியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் நடந்த தடுப்பூசி முகாம்களை கலெக்டர் முருகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது தடுப்பூசி செலுத்தி கொள்ள வருபவர்களுக்கு ரத்த அழுத்த பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறதா? என்று மருத்துவ அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
அரிசி, பெட்ரோல்
வேங்கிக்கால் ஊராட்சியில் தடுப்பூசி செலுத்தி கொள்ளும் பொதுமக்களை ஊக்குவிக்கும் வகையில் கலெக்டர் அலுவலக பஸ் நிறுத்தம் எதிரில், ஜெய்பீம் நகர், மேட்டு தெரு ஆகிய பகுதிகளில் நடைபெற்ற முகாம்களில் தடுப்பூசி செலுத்தி கொள்ள வரும் முதல் 50 பேருக்கு என 150 பேருக்கு தலா 3 கிலோ அரிசி மற்றும் வேங்கிக்காலில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் தடுப்பூசி செலுத்தி கொள்ள வரும் 150 பேருக்கு டோக்கன் அடிப்படையில் தலா 1 லிட்டர் பெட்ரோல் ஆகியவற்றை வேங்கிக்கால் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி தமிழ்செல்வன், கென்னடி, தண்டபாணி, உத்திரம் ஆனந்தம், ஏழுமலை, மணி, பரத் ஆகியோர் கொண்ட குழுவினர் மூலம் வழங்கப்பட்டது.
இதனை கலெக்டர் முருகேஷ் நேரில் வந்து பார்வையிட்டு தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு அரிசியை வழங்கி தொடங்கி வைத்தார்.
அப்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனரும், கூடுதல் கலெக்டருமான பிரதாப், திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அமீர்தராஜ், அருணாச்சலம், வட்டார மருத்துவ அலுவலர் புனேஸ்வரி, திருவண்ணாமலை முன்னாள் நகரமன்ற தலைவர் ஸ்ரீதரன், தி.மு.க. மருத்துவ அணி துணைத்தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், திருவண்ணாமலை நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன் மற்றும் மருத்துவக்குழுவினர், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் உடனிருந்தனர்.
மாவட்டம் முழுவதும் நடந்த தடுப்பூசி முகாம்களில் நேற்று ஒரே நாளில் 80 ஆயிரத்து 20 பேருக்கு கொரோனா தடுப்பூசில் போடப்பட்டுள்ளதாக கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.