குடிநீருடன் கழிவுநீரும் கலந்து வந்ததால் கிராம மக்கள் அதிர்ச்சி

நாட்டறம்பள்ளி அருகே குடிநீருடன் கழிவுநீரும் கலந்து வந்ததால் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Update: 2021-10-10 17:47 GMT
ஜோலார்பேட்டை

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி ஒன்றியம் வெலக்கல்நத்தம் ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட பைனப்பள்ளி பகுதியில் சுமார் 150 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். 

அப்பகுதி அருகே தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ஐஸ் ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலை அருகே ஊராட்சி பகுதிக்கு சொந்தமான இடத்தில் ஆழ்துளை கிணறு போடப்பட்டு அப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக ஊராட்சி சார்பாக வினியோகம் செய்யப்படும் குடிநீரில் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி செயலாளர் ரவியிடம் புகார் தெரிவித்தனர். ஆனால் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. 

நேற்று அப்பகுதி பொதுமக்களுக்கு மீண்டும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. அந்த நீருடன் கழிவுநீரும் சேர்ந்து வந்தது. அதைப் பார்த்ததும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். 

அந்தக் குடிநீரை  பயன்படுத்த முடியமால் அவதிப்பட்டனர். பொதுமக்கள் சேர்ந்து பணம் வசூலித்து டிராக்டர் மூலம் வினியோகித்த குடிநீரை வாங்கி பயன்படுத்தினர். 

அப்பகுதி பொதுமக்களுக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்ய கோரிக்கை விடுத்தனர். 

மேலும் செய்திகள்