ஆன்லைன் ரம்மியில் ரூ.10 லட்சத்தை இழந்த என்ஜினீயர் தற்கொலை
ஆன்லைன் மூலம் ரம்மி விளையாட்டில் ஒரே வாரத்தில் ரூ.10 லட்சம் இழந்ததை பெற்றோர் கண்டித்ததால் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வாணியம்பாடி
ஆன்லைன் மூலம் ரம்மி விளையாட்டில் ஒரே வாரத்தில் ரூ.10 லட்சம் இழந்ததை பெற்றோர் கண்டித்ததால் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
என்ஜினீயர்
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த புருஷோத்தமகுப்பம் காட்டுகொல்லை பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 31). இவர் சென்னையில் உள்ள ஒரு ஐ.டி நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிந்தார்.
இவர் செல்போன் மூலம் ஆன்லைனில் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். ஐ.டி.நிறுவனத்தில் லட்சக்கணக்கில் சம்பாதித்து வந்த இவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்து வந்தார்.
இதனை அவரது பெற்றோர் கண்டித்து வந்துள்ளனர். ஆனால் ஆனந்தன் அதனை பொருட்படுத்தவில்லை என கூறப்படுகிறது.
ரூ.10 லட்சம் இழப்பு
தொடர்ந்து அவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ரூ.10 லட்சத்தை இழந்து விட்டார். இதனால் வேதனை அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை கண்டித்தனர்.
இதனால் மனம் உடைந்த ஆனந்தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வாணியம்பாடி தாலுகா போலீசார் விரைந்து வந்து ஆனந்தனின் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்தனர்.
பிரேத பரிசோதனை
பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வாணியம்பாடி தாலுகா போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.