வாக்குப்பெட்டிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு
சோளிங்கர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் வாக்குப்பெட்டிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சோளிங்கர்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஊராட்சி ஒன்றியத்தில் நேற்று முன்தினம் 196 வாக்குச்சாவடிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குகள் பதிவானது. இதில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து ஆர்வமுடன் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
இரவு அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் முகவர்களின் முன்னிலையில் வாக்குப்பெட்டிகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
பின்னர் அவை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை மையமான சோளிங்கர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு கொண்டு வரப்பட்டு பாதுகாப்புடன் வைக்கப்பட்டது.
அந்த அறைக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு நேற்று அதிகாலை 5 மணி அளவில் தேர்தல் நடத்தும் அலுவலர் அரிகிருஷ்ணன், வட்டார தேர்தல் மேற்பார்வையாளர் சண்முகானந்தம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, அன்பரசன் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.
அப்போது ஊராட்சி ஒன்றிய பொறியாளர்கள் செவ்வந்தி, செல்வம், காங்கிரஸ் நகர தலைவர் டி.கோபால் தி.மு.க. மாவட்ட வழக்கறிஞர் அணி துணைச் செயலாளர் உதயகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். அங்கு மூன்று அடுக்கில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் வாக்கு எண்ணும் மையத்தை 20-க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.