பூட்டை ஊராட்சியில் வாக்குச்சீட்டுகளை திருடிச்சென்ற வேட்பாளரின் முகவர் கைது

பூட்டை ஊராட்சியில் வாக்குச்சீ்ட்டுகளை திருடிச்சென்ற வேட்பாளரின் முகவரை போலீசார் கைது செய்தனர்

Update: 2021-10-10 17:34 GMT
சங்கராபுரம்

சங்கராபுரம் ஒன்றியம்

சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியம் பூட்டை ஊராட்சியில் 12-வது வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் 114-வது வாக்குச்சாவடியில் நடைபெற்றது. அப்போது வார்டு உறுப்பினர் பதவிக்கான 50 சீட்டுகள் கொண்ட ஒரு கட்டு வாக்குச்சீட்டுகள் திடீரென காணாமல் போனது.
இது குறித்து தலைமை வாக்குச்சாவடி அலுவலர் கலைதிருமாறன் ஒன்றிய தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் தெரிவித்தார். அதன் பேரில் வட்டார தேர்தல் பார்வையாளர் ராஜாமணி மற்றும் ஒன்றிய தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை

இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு(பொறுப்பு) ரவிசந்திரன் தலைமையில் போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வாக்குச்சீட்டுகளை திருடிச்சென்றவர் அதே ஊரைச் சேர்ந்த குணசீலன்(வயது 46) என்பதும், பூட்டை ஊராட்சி 12-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளரின் முகவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து குணசீலனை பிடித்த போலீசார் அவரிடம் இருந்து 44 வாக்குச்சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

கைது

இந்தநிலையில் வாக்குச்சீட்டுகளை திருடிச்சென்றது தொடர்பாக ஒன்றிய தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜேந்திரன் சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் திருமால் வழக்குபதிவு செய்து குணசீலனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்