பட்டியல் எழுத்தர் கைதானதால் கொள்முதல் நிலையம் மூடல்்: 1000 நெல் மூட்டைகளுடன் 12 நாட்களாக காத்திருக்கும் விவசாயிகள் மழையில் நனைந்து முளைத்த அவலம்

கடலூர் அருகே பூண்டியாங்குப்பத்தில் பட்டியல் எழுத்தர் கைது செய்யப்பட்டதால் நேரடி நெல்கொள்முதல் நிலையம் மூடப்பட்டது. இதனால் கடந்த 12 நாட்களாக 1000 மூட்டைகளுடன் விவசாயிகள் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. மழையில் நெல் மூட்டைகள் நனைந்து முளைத்து வருவதால் விவசாயிகள் கண்ணீர் வடித்து வருகிறார்கள்.

Update: 2021-10-10 17:06 GMT
கடலூர், 

நெல் கொள்முதல் நிலையங்கள்

கடலூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்த நெல்லை கொள்முதல் செய்ய நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. அதன்படி கடந்த ஆண்டு மாவட்டம் முழுவதும் 114 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டது.
அதன்படி 2020-2021-ம் ஆண்டு பருவத்தில் 2 லட்சத்து 66 ஆயிரத்து 5178 மெட்ரிக்டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, அதில் ரூ.1லட்சத்து 17 ஆயிரம் மெட்ரிக்டன் நெல் அரிசி ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து கடந்த மாதம் 30-ந்தேதியுடன் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டன.

28 இடங்களில் திறப்பு

இந்நிலையில் கரீப் பருவம் 2021-2022 பருவத்திற்கு புதிதாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்து வந்தனர். அதன்படி தானூர், சம்பாரெட்டிப்பாளையம், மேட்டுப்பாளையம், ஆதிநாராயணபுரம், தீர்த்தனகிரி, கொத்தவாச்சேரி, பின்னலூர், வடக்குமாங்குடி உள்பட 28 இடங்களில் மீண்டும் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன.
குறிப்பாக 5 கிலோ மீட்டருக்கு ஒரு இடத்தில் இந்த கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் கடந்த முறை செயல்பட்ட பெரும்பாலான இடங்களில் உள்ள கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டன. இருப்பினும் விவசாயிகள் தங்கள் நெல்லை அந்தந்த இடங்களில் கொண்டு வந்து வைத்துள்ளனர். அதன்படி கடலூர் அருகே பூண்டியாங்குப்பம் நெல் கொள்முதல் நிலையத்திலும் விவசாயிகள் 1000 மூட்டைகளுக்கு மேல் நெல்லை வைத்து கொள்முதல் செய்வதற்காக காத்திருந்து வருகின்றனர்.

கண்ணீர் விடும் விவசாயிகள்

ஆனால் கடந்த 28-ந்தேதி அந்த கொள்முதல் நிலையத்தில் பணியில் இருந்த பட்டியல் எழுத்தர் விவசாயியிடம் லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு அந்த கொள்முதல் நிலையம் செயல்படவில்லை. இதனால் ஏற்கனவே விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகள் அனைத்தும் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையில் நனைந்து நெல் முளைத்து நாற்றாகி வருகிறது. கொட்டி வைத்த நெல்லும் தார் பாய் போட்டு மூடினாலும் முளைத்து வீணாகி வருகிறது. இதை பார்த்து விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.
இது பற்றி விவசாயிகள் கூறும் போது, எங்கள் பகுதியில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்காததால் விவசாயிகள் நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறோம். ஏற்கனவே பிடித்தம் செய்த நெல், கொள்முதல் செய்வதற்காக கொண்டு வந்த நெல் அனைத்தும் முளைத்து வீணாகி வருகிறது. ஆகவே இதை மாவட்ட நிர்வாகம் கவனித்து எங்கள் பகுதியில் மீண்டும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்