தேர்தல் ஆணையருக்கு முன் அனுபவம் இல்லை

புதுவை உள்ளாட்சி தேர்தலில் குளறுபடிகள் இருப்பது மாநில தேர்தல் ஆணையருக்கு முன் அனுபவம் இல்லாததை காட்டுவதாக அமைச்சர் நமச்சிவாயம் குற்றஞ்சாட்டினார்.;

Update: 2021-10-10 16:50 GMT
புதுச்சேரி, அக்.
புதுவை உள்ளாட்சி தேர்தலில்  குளறுபடிகள் இருப்பது மாநில தேர்தல் ஆணையருக்கு முன் அனுபவம் இல்லாததை காட்டுவதாக அமைச்சர் நமச்சிவாயம் குற்றஞ்சாட்டினார். 
நமச்சிவாயம்
புதுச்சேரி பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன், தேசிய செயற்குழு உறுப்பினரும், அமைச்சருமான நமச்சிவாயம் ஆகியோர் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுச்சேரியில் 2011-ல் இருந்த மக்கள் தொகை அடிப்படையில் தான் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி தேர்தல் நடத்துவதற்கு மிகவும் காலதாமதம் ஏற்படும். 2011-ல் எந்தந்த சாதிக்கு எந்த அளவுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளதோ அந்த இடஒதுக்கீட்டின் அடிப்படையில் தேர்தலை நடத்த வேண்டும். தற்போது பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியின மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. அவசர கதியில் தேர்தலை நடத்த வேண்டிய அவசியம் என்ன?.
புதுச்சேரியில் தற்போது மழைக்காலம், பண்டிகை காலம் வருகிறது. இதனை கருத்தில் கொண்டு தேர்தல் தேதியை தள்ளி வைக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலை நடத்த கூடாது என்பது எங்களுக்கு நோக்கமல்ல. ஆனால் முறையான இடஒதுக்கீடு வழங்கி, பண்டிகைகள் முடிந்த பின்னர் தேர்தலை நடத்த வேண்டும்.
முன்அனுபவம் இல்லை
ஏற்கனவே மக்கள் கொரோனாவில் இருந்து விடுபட்டு வந்து பண்டிகைகளை கொண்டாட தயாராகி வருகின்றனர். இந்த நேரத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தினால் சரியாக இருக்காது. உள்ளாட்சி தேர்தல் நடத்தும் ஆணையருக்கு முன் அனுபவம் இல்லை. அதனால் தான் இதுபோன்ற குளறுபடிகள் நடைபெற்றுள்ளது.
அரசியல் கட்சியினர் ஆட்சேபனை தெரிவிக்க தேதி கொடுக்கப்படவில்லை. இது கண்டனத்திற்கு உரியது. எனவே மக்கள் நலனை கருத்தில் கொண்டு அனுபவம் வாய்ந்த மாநில தேர்தல் ஆணையரை நியமிக்க வேண்டும். 
மக்கள் விரும்பக்கூடிய தேர்தலாக இருக்க வேண்டும். தேர்தல் ஆணையர் விரும்பக்கூடிய தேர்தலாக இருக்ககூடாது. தேர்தல் தேதியை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்