ஓமலூர் அருகே ஊரக உள்ளாட்சி தேர்தல்: வாக்குச்சாவடியில் அதிகாரியுடன் மதுபோதையில் தகராறு-2 தொழிலாளிகள் கைது

ஓமலூர் ஒன்றியத்தில் உள்ள வாக்குச்சாவடியில் அதிகாரியுடன் மதுபோதையில் தகராறு செய்த 2 தொழிலாளிகளை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-10-09 22:51 GMT
ஓமலூர்:
ஓமலூர் ஒன்றியத்தில் உள்ள வாக்குச்சாவடியில் அதிகாரியுடன் மதுபோதையில் தகராறு செய்த 2 தொழிலாளிகளை போலீசார் கைது செய்தனர்.
தகராறு
சேலம் மாவட்டத்தில் 24 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் ஒரு சில வாக்குச்சாவடிகளில் மட்டும் வாக்குப்பதிவின் போது சில பிரச்சினைகள் ஏற்பட்டன.
ஓமலூர் ஒன்றியத்தில் 10-வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு வாக்களிக்கும் வகையில் பெரியேரிப்பட்டி ஊராட்சி அரசு தொடக்கப்பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. இந்த வாக்குச்சாவடிக்கு நேற்று காலை ஏராளமானவர்கள் வந்து வரிசையில் நின்று வாக்களித்தனர்.
அப்போது வாக்குச்சாவடிக்கு ஒருவர்பின் ஒருவராக சென்று 2 பேர் வாக்களித்தனர். ஆனால் அவர்கள் வாக்களித்து விட்டு அங்கிருந்து செல்லாமல் நின்று கொண்டிருந்தனர். தேர்தல் பணியில் இருந்த அதிகாரி ஒருவர் அவர்களை அங்கிருந்து செல்லுமாறு தெரிவித்தார். ஆனால் மதுபோதையில் அவர்கள் அதிகாரியை தரக்குறைவாக பேசியதுடன் தகராறில் ஈடுபட்டனர்.
தொழிலாளிகள் கைது
இதை பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வேகமாக சென்று அவர்கள் 2 பேரையும் வாக்குச்சாவடியில் இருந்து வெளியே அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் ரெட்டிப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளிகளான மணிகண்டன் (வயது 29), ஜெகநாதன் (50) ஆகியோர் என்பதும், மதுபோதையில் அதிகாரியிடம் தகராறு செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் வீராணம் ஊராட்சிக்குட்பட்ட வீமனூரில் உள்ள தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. அப்போது வாக்குச்சாவடி அருகே 100 மீட்டருக்குள் நின்று கொண்டு பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பது தொடர்பாக தி.மு.க., அ.தி.மு.க. தரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 
இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இருதரப்பை சேர்ந்த 2 பேரை போலீஸ் வேனில் ஏற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் போலீசாரிடம் எழுதி கொடுத்த பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
அ.தி.மு.க.-தி.மு.க.வினர் வாக்குவாதம்
மல்லூர் அருகே மேச்சேரியம் பாளையத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. மாலை 4 மணி அளவில் வாக்காளர் ஒருவர் வாக்களிப்பதற்கான அடையாள ஆவணங்கள் ஏதும் இல்லாமல் வாக்குச்சீட்டுடன் மட்டும் ஓட்டு போடுவதற்கு வந்தார். அதற்கு அங்கிருந்த அ.தி.மு.க., சுயேச்சை வேட்பாளர்களுக்கான முகவர்கள் அந்த நபரை வாக்களிக்க அனுமதிக்க கூடாது என்றும், அவர் இந்த பகுதியை சேர்ந்தவர் கிடையாது என்றும், கள்ள ஓட்டு போடுவதற்காக வந்தார் என்றும் கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் அங்கு அ.தி.மு.க.-தி.மு.க.வினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் இருதரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலையும் உருவானது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ் விரைந்து சென்றார். பின்னர் போலீசார் இருதரப்பினரையும் எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். மேலும் ஆவணங்கள் இல்லாமல் வாக்களிக்க வந்த நபரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்