தனியார் மனைப்பிரிவு நிலத்தில் சாலை அமைத்த போது தார் பாய்லர் வெடித்து கூலித்தொழிலாளி பலி-வாழப்பாடி அருகே கோர விபத்து
வாழப்பாடி அருகே தனியார் மனைப்பிரிவு நிலத்தில் சாலை அமைத்த போது, தார் பாய்லர் வெடித்து கூலித்தொழிலாளி பலியான கோர விபத்து நடந்தது.
வாழப்பாடி:
வாழப்பாடி அருகே தனியார் மனைப்பிரிவு நிலத்தில் சாலை அமைத்த போது, தார் பாய்லர் வெடித்து கூலித்தொழிலாளி பலியான கோர விபத்து நடந்தது.
கூலித்தொழிலாளி பலி
சேலம் மாவட்டம் பஞ்சு காளிப்பட்டி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் பூபதி (வயது 35), கூலித்தொழிலாளி. வாழப்பாடி அருகே உள்ள முத்தம்பட்டி மைக்ரோ ஸ்டேஷன் பஸ் நிறுத்தம் அருகே தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் பிளாட் அமைத்துள்ளனர். அங்கு தார் சாலை போடும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று காலை தார் சாலை போடும் பணி தொடங்கியது. அங்கு பூபதி மற்றும் தொழிலாளர்கள் வேலை செய்தனர். அப்போது தாரை உருக்கும் பாய்லர் திடீரென வெடித்தது. இந்த எதிர்பாராத விபத்தில் பூபதி சம்பவ இடத்திலேயே பலியானார்.
3 பேர் மீது வழக்கு
இதுகுறித்து தகவலறிந்த வாழப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் பாதுகாப்பாக வேலை செய்யாமல் கவனக்குறைவாக கூலித் தொழிலாளியின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த சேலம் சின்ன திருப்பதி பகுதியை சேர்ந்த காண்டிராக்டர் சுப்பிரமணியன் (44), சேலம் போடிநாயக்கன்பட்டியை சேர்ந்த மேற்பார்வையாளர் சதீஷ் (30), நில உரிமையாளர் சஞ்சய் (32) ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் வாழப்பாடி அருகே சோகத்தை ஏற்படுத்தியது. விபத்தில் பலியான பூபதிக்கு, மணிமேகலை (32) என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர்.