முக்கடல் அணை பூங்கா பகுதியில் சிறுத்தை நடமாட்டம்

பூதப்பாண்டி அருகே முக்கடல் அணை பூங்கா பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்த காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

Update: 2021-10-09 21:13 GMT
அழகியபாண்டியபுரம், 
பூதப்பாண்டி அருகே முக்கடல் அணை பூங்கா பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்த காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.
முக்கடல் அணை பூங்கா
குமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள முக்கடல் அணையில் இருந்து நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த அணை நாகர்கோவில் மாநகராட்சி கைவசம் உள்ளது. மேலும் இந்த அணை பகுதியில் பொழுதுபோக்கு பூங்கா ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. 
இந்த பூங்காவில் சிறுவர்கள் விளையாடுவதற்கான விளையாட்டு பொருட்கள் மற்றும் படப்பிடிப்பு நடத்தும் வசதிகளும் உள்ளன. அசம்பவாத சம்பவங்களை கண்காணிக்கவும், வன விலங்கு நடமாட்டத்தை அறிந்து கொள்ளவும் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டிருந்தது.
சிறுத்தை நடமாட்டம்
இந்தநிலையில் கண்காணிப்பு கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது கடந்த ஆகஸ்டு மாதம் 2-ந் தேதி இரவு ஒரு சிறுத்தை பூங்காவுக்குள் வந்து சென்ற காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது தெரியவந்தது. 
இந்தநிலையில் கடந்த 6-ந் தேதி மற்றும் 7-ந்் தேதி இரவிலும் சிறுத்தை நடமாட்டம் இருந்தது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அதாவது, புதர்களில் இருந்து வெளியே வரும் சிறுத்தை பூங்கா சாலை வழியாக சென்று இருள் சூழ்ந்த இடத்திற்குள் சென்று மறைகிறது.
வனத்துறையினர் ஆய்வு 
இதனையடுத்து வனச்சரகர் மணிமாறன் தலைமையில் வனத்துறையினர் சிறுத்தைகள் வந்து சென்ற பாதைகளை ஆய்வு செய்தனர். 
இதுகுறித்து வனச்சரகர் மணிமாறன் கூறும்போது, இந்த பகுதியில் இரு புறமும் மலை இருப்பதால் வன விலங்குகள் அடிக்கடி இந்த பகுதிக்குள் நுழைந்து விடுகிறது. மேலும் சிறுத்தை போன்ற வன விலங்குகளும் வந்து செல்கின்றது. கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருப்பதால் சிறுத்தைகள் வந்து செல்வது பதிவாகி உள்ளது என்றார்.

மேலும் செய்திகள்