மதமாற்ற தடை சட்டத்தை அமல்படுத்த விசுவ இந்து பரிஷத் வலியுறுத்தல்

‘நாடு முழுவதும் மதமாற்ற தடை சட்டத்தை அமல்படுத்த வேண்டும்' என்று விசுவ இந்து பரிஷத் அமைப்பின் அகில உலக பொதுச்செயலாளர் மிலன் பிராண்டே வலியுறுத்தியுள்ளார்.;

Update: 2021-10-09 19:44 GMT
பழனி:
‘நாடு முழுவதும் மதமாற்ற தடை சட்டத்தை அமல்படுத்த வேண்டும்' என்று விசுவ இந்து பரிஷத் அமைப்பின் அகில உலக பொதுச்செயலாளர் மிலன் பிராண்டே வலியுறுத்தியுள்ளார்.
மதமாற்ற தடை சட்டம்
விசுவ இந்து பரிஷத் அமைப்பின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் பழனியில் நேற்று நடந்தது. இதற்கு மாநில அமைப்பு செயலாளர் சேதுராமன் தலைமை தாங்கினார். ஆர்.எஸ்.எஸ். கோட்ட பொறுப்பாளர் அம்பி, விசுவ இந்து பரிஷத் அமைப்பின் (திருக்கோவில் திருமடங்கள்) மாநில அமைப்பாளர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அகில உலக பொதுச்செயலாளர்‌ மிலன் பிராண்டே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
காஷ்மீரில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள், சீக்கியர்கள் மீது பாகிஸ்தான் உதவியுடன் பயங்கரவாதிகள் நடத்துகிற தாக்குதலுக்கு மத்திய அரசு தக்க பதிலடி கொடுக்க வேண்டும். பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களை குறி வைத்து மதமாற்றம் நடப்பது கண்டிக்கத்தக்கது. குறிப்பாக, தமிழகத்தில் கிறிஸ்தவ அமைப்பினர் அதிகமாக மதமாற்றத்தில் ஈடுபடுகின்றனர். அரசியலமைப்புக்கு எதிரான இந்த நடவடிக்கையை தடுக்க, நாடு முழுவதும் மதமாற்ற தடை சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
வியாபார நோக்கில்...
தமிழகத்தில் இந்து கோவில்களை அரசு கட்டுப்பாட்டில் வைத்திருப்பது சட்ட விரோதமானது. இதேபோல் பக்தர்கள் காணிக்கையாக அளித்த தங்க நகைகளை உருக்கி கட்டிகளாக மாற்ற உள்ளதாக அரசு அறிவித்திருப்பது முற்றிலும் தவறானது.
நேர்த்திக்கடனாக பக்தர்கள் அளித்த பொருட்கள், உடைமைகளை அவர்கள் எதற்காக கொடுத்தார்களோ? அதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். மாறாக, வியாபார நோக்கில் அரசு செயல்படுவதை தவிர்க்க வேண்டும்.
மேலும் வார இறுதி நாட்களில் கோவில்களை அடைப்பது, பக்தர்களின் நலனுக்கு எதிரானது. மதுக்கடைகள், தியேட்டர்கள், வணிக நிறுவனங்கள் திறக்கப்படும்போது கோவில்களை மட்டும் அடைத்திருப்பது ஏற்று கொள்ளக்கூடியது அல்ல. எனவே அனைத்து நாட்களிலும் கோவில்களை திறக்க வேண்டும். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு, தமிழக மக்கள் பெரும் பங்காற்றி உள்ளனர். வருகிற 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் அயோத்தியில் கோவில் கருவறைக்குள் ராமர் சிலை வைக்கப்படும். தமிழக மக்கள் அயோத்திக்கு வந்து சாமி தரிசனம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்