10 மயில்கள் மர்மமான முறையில் செத்துக்கிடந்தன

பல்லடம் அருகே 10 மயில்கள் மர்மமான முறையில் செத்துக்கிடந்தன. அவை விஷம் வைத்து கொல்லப்பட்டதா? என்று வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2021-10-09 19:25 GMT
பல்லடம்
பல்லடம் அருகே 10 மயில்கள் மர்மமான முறையில் செத்துக்கிடந்தன. அவை விஷம் வைத்து கொல்லப்பட்டதா? என்று வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செத்துக்கிடந்த மயில்கள்
 பல்லடம் அருகே வடுகபாளையம் புதூர் வேலங்காடு தோட்டத்தில் நேற்று 6 ஆண் மயில்கள், 4 பெண் மயில்கள்  என மொத்தம் 10 மயில்கள் மர்மமான முறையில் செத்துக் கிடந்தன. இதை  பார்த்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அதிர்ச்சியடைந்து  வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இது பற்றிய தகவல் அறிந்ததும் திருப்பூர் வனச்சரக அலுவலர் செந்தில்குமார் தலைமையில் வனவர்கள் உமா மகேஸ்வரி, திருநாவுக்கரசு, கால்நடை மருத்துவர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் செத்துக்கிடந்த மயில்களின் உடல் பாகங்கள் மருத்துவ பரிசோதனை செய்தார். பின்னர் அவற்றின் பாகங்கள்  பரிசோதனை கூடத்திற்கு அனுப்புவதற்காக எடுத்துச் செல்லப்பட்டன. 
காரணம் என்ன?
இந்த மயில்கள் எப்படி செத்தன என்று தெரியவில்லை. இதுகுறித்து  வனத்துறை அதிகாரிகள் கூறும்போது “ மயில்கள் விஷம் வைத்துக் கொல்லப்பட்டதா அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று  மருத்துவ பரிசோதனை  முடிவுகள் வந்த பின் தான் தெரியும்” என்றனர். 
மயில்கள் செத்ததற்கான  காரணம் குறித்து வனத்துறையினர் மற்றும் பல்லடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 10 மயில்கள் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்