பாம்பன் தூக்குப்பாலத்தை கடந்த மிதவைக்கப்பல்

பாம்பன் தூக்குப்பாலத்தை கடந்த மிதவைக்கப்பல்;

Update: 2021-10-09 18:58 GMT
ராமேசுவரம்
பாம்பன் ரெயில்வே தூக்குப்பாலத்தை கடந்து செல்வதற்காக கடலூரில் இருந்து மங்களூரு செல்ல கோட்டியா என்று சொல்லக்கூடிய பாய்மர படகு ஒன்றும் மற்றும் நாகப்பட்டினத்திலிருந்து கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி செல்வதற்காக 20-க்கும் மேற்பட்ட ஆழ்கடல் மீன்பிடி படகுகளும் வடக்கு கடல் பகுதியில் கடந்த 2 நாட்களாக நங்கூரமிட்டு காத்திருந்தன. இதைதவிர பாம்பன் புதிய ரெயில்வே பாலத்தின் பணிக்காக கேரளாவிலிருந்து வந்த பெரிய மிதவைக் கப்பல் ஒன்றும் தூக்குப்பாலத்தை கடந்து செல்ல காத்திருந்தன.
இந்தநிலையில் பாம்பன் ரெயில் தூக்குப்பாலம் நேற்று மதியம் 12.30 மணியளவில் திறக்கப்பட்டதை தொடர்ந்து துறைமுக அதிகாரிகள் அனுமதியுடன் பாய்மர படகு பாலத்தை கடந்து மங்களூரு நோக்கி சென்றது. அதன் பின்னர் ஆழ்கடல் மீன்பிடி படகுகள் ஒன்றன்பின் ஒன்றாக தூக்குப்பாலத்தை கடந்து சென்றன. கடைசியாக புதிய ரெயில் பாலத்தின் பணிக்காக கொண்டுவரப்பட்ட சுமார் 50 மீட்டர் நீளமும் 1,200 டன் எடையும் கொண்ட பெரிய மிதவையை இழுவைக் கப்பல் ஒன்று இழுத்தபடி தூக்குப்பாலத்தை கடப்பதற்காக கப்பல் வரும் கடல் வழிப் பாதையில் வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த பாதையை விட்டு மிதவையை இழுத்து வந்த இழுவை கப்பல் சற்று விலகியதால் தூக்குப்பாலத்தை கடக்க முடியாமல் அரை மணி நேரத்திற்கும் மேலாக அந்த கடல் பகுதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து பாம்பனை சேர்ந்த மீன்பிடி விசைப்படகு உதவியுடன் இழுவை கப்பல் ராட்சத மிதவையை இழுத்தபடி தூக்குப் பாலத்தை மெதுவாக கடந்து கேரளா நோக்கி சென்றது. பாம்பன் தூக்கு பாலத்தை அடுத்தடுத்து இழுவை மிதவைக் கப்பல், பாய்மரப்படகு கடந்து சென்றதை ரோடு பாலத்தில் நின்றபடி ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்த்தனர்.

மேலும் செய்திகள்