வன உயிரின வார நிறைவு விழா
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வன உயிரின வார நிறைவு விழா நடைபெற்றது.
தளி, அக்.10-
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வன உயிரின வார நிறைவு விழா நடைபெற்றது.
வனவிலங்கு வார விழா
மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் அடங்கும். இங்கு யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளும் அரியவகை தாவரங்கள் மற்றும் ஏராளமான சிறுஉயிரினங்களும் வசித்து வருகின்றன. வனத்தின் இயல்பை காப்பதிலும் இயற்கையைப் பேணுவதிலும் வன விலங்குகளின் பங்கு முக்கியமானதாகும்.
அவற்றின் மகத்துவத்தை தெரிந்து கொள்ளும் விதமாக வனத்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதில் வனவிலங்கு வார விழாவும் அடங்கும். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆனைமலை புலிகள் காப்பகத்தில் தொடங்கிய இந்த விழாவானது நேற்று நிறைவு பெற்றது.
நிறைவு விழா
வனஉயிரின வார நிறைவு விழாவை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் வினீத் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் மற்றும் மாவட்ட வன அலுவலர் தேஜஸ்வி ஆகியோர் தலைமையில் சின்னாரில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உதவி வனப்பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குநர் கணேஷ்ராம் வரவேற்புரை ஆற்றினார். அதைத் தொடர்ந்து போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற்ற மாணவ- மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இதில் மலைவாழ் மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது. மேலும் 17 மலைவாழ் குடியிருப்புகளுக்கு வழங்கப்பட உள்ளது. இதன் முதற்கட்டமாக 6 குடியிருப்புகளைச் சேர்ந்த சுமார் 450 மலைவாழ் குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.
மேலும் பொது இடங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு வரும் பாம்புகளை உயிருடன் மீட்கப்பட்டு வனப் பகுதியில் விடுவதில் சிறப்பாக பணி ஆற்றிய வேட்டை தடுப்பு காவலர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.