கரூர் மாவட்டத்தில் 82.36 சதவீதம் வாக்குப்பதிவு

கரூர் மாவட்டத்தில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். இதனால் 82.36 சதவீத வாக்குப்பதிவானது.

Update: 2021-10-09 18:45 GMT
கரூர், 
ஊரக உள்ளாட்சி தேர்தல்
கரூர் மாவட்டத்தில் பல்வேறு காரணங்களினால் ஏற்பட்டுள்ள காலியிடங்கள் மற்றும் நிரப்பப்படாத பதவி இடங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்-1, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்-1, கிராம ஊராட்சி தலைவர்-1, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்-7 ஆகிய 10 பதவி இடங்களுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது.
இதில் 56 மையங்களில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினருக்கும், 10 மையங்களில் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினருக்கும், 6 மையங்களில் கிராம ஊராட்சி தலைவருக்கும், 6 மையங்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினருக்கும் என மொத்தம் 78 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு வாக்குப்பெட்டிகள், வாக்குச்சீட்டுகள் உள்ளிட்ட பொருட்கள் நேற்று முன்தினம் இரவே தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன. மேலும் கொரோனா தடுப்பு பொருட்களும் தயார் நிலையில் இருந்தன.
வாக்குப்பதிவு
கரூர் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அப்போது வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். வாக்காளர்கள் முகக்கவசம் அணிந்து வந்திருந்தனர். முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு வாக்குச்சாவடிகளில் முகக்கவசம் வழங்கப்பட்டது. தொடர்ந்து வாக்காளர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் சானிடைசர் மூலம் கைகள் சுத்தம் செய்யப்பட்டது. வாக்களிப்பதற்காக வாக்காளர்களுக்கு கையுறையும் வழங்கப்பட்டன.
இதையடுத்து கோயம்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மேலப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மே.வெள்ளாளப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மணவாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்பட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் வார்டு எண் 8-க்கான தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் தானேஷ் என்கிற முத்துக் குமார் மேலப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக் கப்பள்ளியில் அமைக்கப்பட் டுள்ள வாக்குச்சாவடியில் தனது ஓட்டை பதிவு செய் தார்.
கிருஷ்ணராயபுரம்
கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம் சித்தலவாய் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 4 பேர் போட்டியிடுகின்றனர். வாக்காளர்கள் ஓட்டு போட வசதியாக மொத்தம் 6 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. காலையில் மந்தமாக தொடங்கிய ஓட்டுப்பதிவு சீரான இடைவெளியில் அமைதியாக நடைபெற்றது.
லாலாபேட்டை, அரவக்குறிச்சி
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட பிள்ள பாளையம் ஊராட்சி வல்லத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 8-வது வார்டு உறுப்பினருக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் நீண்டவரிசையில் நின்று பொதுமக்கள் வாக்களித்தனர்.
அரவக்குறிச்சி ஒன்றியம் வேலம்பாடி ஊராட்சி 10-வது வார்டு உறுப்பினருக்கான தேர்தல் பாப்பநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் நடைபெற்றது. இதில் சமூக இடைவெளி பின்பற்றி பொதுமக்கள் வாக்களித்தனர்.
க.பரமத்தி
க.பரமத்தி ஊராட்சி வார்டு உறுப்பினர், புன்னம் ஊராட்சி வார்டு உறுப்பினர் மற்றும் க.பரமத்தி 8-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. இதில் மொஞ்சனூர் இளங்கோ எம்.எல்.ஏ. வாக்களித்தார். இந்த தேர்தலில் வாக்களிக்க வந்தவர்களுக்கு சானிடைசர், காய்ச்சல் கண்டறியும் சோதனை மற்றும் கையுறை, முகக்கவசம் கொடுத்த பின்னரே வாக்குச்சாவடிக்குள் அனுப்பி வைத்தனர். மேலும் சமூக இடைவெளி பின்பற்றி வாக்காளர்கள் வாக்களித்தனர். இதேபோல் முதியோர், நடக்க முடியாதவர்கள், உடல் நிலை சரி இல்லாதவர்களுக்கு சக்கர நாற்காலி மூலம் வாக்குப்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
வாக்குப்பதிவு நிலவரம்
கோயம்பள்ளி, மேலப்பாளையம், ஏமூர், மணவாடி, பாகநத்தம், கே.பிச்சம்பட்டி, வெள்ளியணை, ஜெகதாபி உள்ளிட்ட பகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. பிற்பகலில் பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் குறைந்த வாக்காளர்களே வாக்களித்ததை காணமுடிந்தது. அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கரூர் மாவட்டத்தில் காலை 9 மணி நிலவரப்படி 16.10 சதவீதமும், காலை 11 மணி நிலவரப்படி 39.15 சதவீதமும், 1 மணி நிலவரப்படி 58.03 சதவீதமும், 3 மணி நிலவரப்படி 69.79 சதவீத வாக்குப்பதிவு பதிவாகியிருந்தது. மாலை 6 மணி நிலவரப்படி கரூர் மாவட்டத்தில் மொத்தம் 82.36 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.
வாக்குப்பதிவு மையங்களில் கலெக்டர் ஆய்வு
ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி வெள்ளியனை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம் கூனம்பட்டி, மொ.தொட்டம்பட்டி, தொட்டியாப்பட்டி ஆகிய வாக்குப்பதிவு மையங்களில் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா? என்றும், தேர்தல் நுண்பார்வையாளர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளார்களா? என்றும் ஆய்வு செய்தார்.  கொரோனா தொற்றுப்பரவலை கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டுள்ள அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டுள்ளதா? என்றும், மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் எளிதில் சென்று வாக்களிக்கும் வகையில் அவர்களை அழைத்துச்செல்ல தன்னார்வலர்களுடன் சக்கர நாற்காலி வைக்கப்பட்டுள்ளதா? என்றும் பார்வையிட்டார். மேலும், வாக்களிக்க வருகை தரும் வாக்காளர்கள், வாக்குச்சாவடி மையத்தில் பணியாற்றும் அலுவலர்கள் என அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும், சமூக இடைவெளி முறையாக கடைபிடிக்கப்பட வேண்டும் என்றும், வாக்குச்சாவடி மையத்திற்குள் நுழையும்போதே வாக்காளர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு, கைகள் கிருமிநாசினியால் சுத்தம் செய்யப்பட்டு, முகக்கவசம் இல்லாதவர்களுக்கு முகக்கவசம் வழங்கிய பின்பே அனுமதிக்க வேண்டும் என்றும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
வெறிச்சோடிய வாக்குச்சாவடி
புன்னம் ஊராட்சியின் 4-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 6 பேர் போட்டியிட்டனர். இதையடுத்து, புன்னம்சத்திரம் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. வாக்குப்பதிவு மந்தமாகவே நடைபெற்றது. காலை 11 மணியளவில் வாக்களிக்க யாரும் வராததால் வாக்குச்சாவடி வெறிச்சோடி காணப்பட்டது. மாலை 4 மணியளவில் கூலிதொழிலாளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். புன்னம் ஊராட்சி 4-வது வார்டில் மொத்தம் 785 வாக்காளர்கள் உள்ளனர். அதில் ஆண் வாக்காளர்கள் 375 பேரும், பெண் வாக்காளர்கள் 410 பேரும் ஆவர். மொத்தம் 575 வாக்குகள் பதிவானது. இதில் ஆண் வாக்காளர்கள் 272 பேரும் பெண் வாக்காளர்கள் 303 பேரும் வாக்களித்துள்ளனர். இது 73.2 சதவீதம் ஆகும்.
முதியோர், மாற்றுத்திறனாளிகள் ஆர்வமுடன் வாக்களித்தனர்
கரூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆர்வமுடன் வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் வீல்சேர் உதவியுடனும், உறவினர்களின் உதவியுடனும் வந்து வாக்களித்து சென்றனர்.

மேலும் செய்திகள்