மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவில் பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்.

Update: 2021-10-09 18:34 GMT
ஊரக உள்ளாட்சி தேர்தல்
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சிகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இதில் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 9-வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கும், திருமயம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 5-வது வார்டு ஒன்றிய கவுன்சிலருக்கும், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களில் நல்லம்பாள்சமுத்திரம் ஊராட்சி வார்டு எண்.2, திருவாக்குடி ஊராட்சி வார்டு எண்.5, தாந்தாணி ஊராட்சி வார்டு எண்.4, நெய்வாசல் ஊராட்சி வார்டு எண்.9, பி.அழகாபுரி ஊராட்சி வார்டு எண்.4, குலமங்களம் தெற்கு ஊராட்சி வார்டு எண்.9, வேங்கிடகுளம் ஊராட்சி வார்டு எண்.7, ஆர்.பாலக்குறிச்சி ஊராட்சி வார்டு எண்.7 என மொத்தம் 8 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும், மறவாமதுரை, அரசமலை ஊராட்சித் தலைவர் பதவிக்கும், கீழப்பனையூர் கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கும், மாங்காடு ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
வாக்குப்பதிவு
வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது. தேர்தலில் ஆண் வாக்காளர்கள் 35 ஆயிரத்து 767 பேரும், பெண் வாக்காளர்கள் 36 ஆயிரத்து 497 பேரும், திருநங்கைகள் 15 பேரும் என மொத்தம் 72 ஆயிரத்து 279 வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக 145 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. கலெக்டர் கவிதாராமு உத்தரவின் பேரில் வாக்குப்பதிவிற்கான அனைத்து ஏற்பாடுகளும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. வாக்குச்சீட்டு முறையில் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். மாவட்டத்தில் நேற்று காலையில் வாக்குப்பதிவு தொடங்கிய போது ஆங்காங்கே மழை தூறியது. இதனால் வாக்காளர்கள் வாக்களிக்க அதிகம் வரவில்லை. காலையில் வாக்குப்பதிவு கொஞ்சம் மந்தமாக இருந்தது. ஒவ்வொருவராக வந்து வாக்களித்தப்படி இருந்தனர். ஒரு சில இடங்களில் பொதுமக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்றனர். நேரம் செல்ல... செல்ல... வாக்காளர்கள் அதிகமாக வாக்குச்சாவடிகளுக்கு வந்தனர். கிராமப்புறங்களில் பெண்கள் பலர் வீட்டு வேலை மற்றும் வயல் வேலைகளை முடித்து விட்டு வந்து வாக்களித்தனர்.
மாவட்ட கவுன்சிலர் 9-வது வார்டு
அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 9-வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி என 7 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர். 102 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்கள் வாக்களித்தனர். வாக்கு சாவடிக்கு வாக்களிக்க வந்த வாக்காளர்களுக்கு வாசலிலேயே கிருமிநாசினி வழங்கப்பட்டது. பின்னர் முககவசம், கையுைறகள் வழங்கப்பட்டது. இதில் ஆண் வாக்காளர்கள் 15,961, பெண் வாக்காளர்கள் 17,945, 3-ம் பாலினத்தவர்கள் 12 பேர் என 33.918 வாக்களித்தனர்.
திருமயம் -காரையூர்
திருமயம் ஒன்றியம் விராச்சிலையில் 5-வது வார்டு எண் ஒன்றிய கவுன்சிலர், பி.அழகாபுரி மற்றும் நெய்வாசல் ஊராட்சியில் வார்டு உறுப்பினர் பதவிக்கு 12 வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற தேர்தலில் வாக்காளர்கள் வாக்களித்தனர். தொடர்ந்து வாக்குப்பதிவு முடிந்து வாக்குப்பெட்டிகள் அனைத்தும் போலீஸ் பாதுகாப்புடன் திருமயம் ஊராட்சி ஒன்றியத்திற்கு கொண்டுவரப்பட்டு சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம் மறவாமதுரை ஊராட்சி மன்ற தலைவருக்கான தேர்தல் 8 வாக்குச்சாவடிகளில், அரசமலை ஊராட்சிமன்ற தலைவருக்கான தேர்தல் வையாபுரி, அரசமலை உள்பட 5 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்கு செலுத்தினர். 
பொன்னமராவதி-வடகாடு
பொன்னமராவதி ஒன்றியம், ஆர்.பாலக்குறிச்சி ஊராட்சியில் 7-வது வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் வாக்கு செலுத்தினர்.
வடகாடு அருகேயுள்ள மாங்காட்டில் ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் வாக்காளர்கள் வாக்களித்தனர். இதில் மொத்தம் 2985 பேர் வாக்களித்தனர். 81.38 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. பதற்றமான வாக்குச்சாவடி என்பதால் ஆலங்குடி துணை சூப்பிரண்டு வடிவேல் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
கீரமங்கலம்
கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் தெற்கு ஊராட்சியில் 9-வது வார்டு உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தலில் 2 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மொத்தம் 215 வாக்குகளில் 164 வாக்குகள் பதிவாகி உள்ளது. வேங்கிடகுளம் 7-வது வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்.
அறந்தாங்கி-அரிமளம்
அறந்தாங்கி ஒன்றியம் தாந்தாணி ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு சிதம்பரவிடுதி அரசு தொடக்க பள்ளியில் வாக்களார்கள் வாக்கு செலுத்தினர். இந்த வார்டில் மொத்தம் 627 வாக்காளர்கள் உள்ளனர். இதில்  381 பேர் வாக்களித்தனர். காலை முதலே மந்தமாகவே வாக்கு பதிவு நடந்தது.
அரிமளம் ஒன்றியம் கீழப்பனையூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் மொத்தம் 2011 வாக்காளர்களில் 1,447 பேர் வாக்களித்தனர். 72 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்று இருந்தது. 
நல்லம்பாள்சமுத்திரம் ஊராட்சி 2-வது வார்டு உறுப்பினருக்கான தேர்தலில் மொத்தம் 250 வாக்காளர்களில் 141 வாக்களித்தனர். திருவாக்குடி 5-வது வார்டு உறுப்பினருக்கான தேர்தலில் 337  வாக்காளர்களில் 178 பேர் வாக்களித்தனர். தேர்தல் நடத்தும் அலுவலர் அமுதவல்லி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி ஆகியோர் ஆய்வு மேற்கொண்ட னர்.
சீல் வைப்பு 
மாவட்டத்தில் மதியத்திற்கு மேல் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்தது. பெண்கள் அதிக அளவில் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். வாக்குப்பதிவு மாலை 6 மணி அளவில் முடிவடைந்தது. வாக்குப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வேனில் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.
போட்டியின்றி தேர்வானவர்கள்
மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியின்றி ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் 33 பேரும், கீழ தானியம் ஊராட்சி மன்ற தலைவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

69.78 சதவீதம் வாக்குப்பதிவு

புதுக்கோட்டை மாவட்ட ஊரக உள்ளாட்சியில் 14 பதவிகளுக்கு நேற்று நடந்த தேர்தலில் காலை 7 முதல் 9 மணி வரை 12.3 சதவீதமும், காலை 9 முதல் 11 மணி வரை 31.54 சதவீதமும், பகல் 11 முதல் 1 மணி வரை 48.88 சதவீதமும், பகல் 1 முதல் மாலை 3 மணி வரை 59.6 சதவீதமும் வாக்குப்பதிவு பதிவாகியிருந்தது. மாலை 3 மணி முதல் 5 மணி வரை 67.6 சதவீதமும் வாக்குப்பதிவானது. மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் மொத்தம் 69.78 சதவீதம் வாக்குப்பதிவாகியிருந்தது.

பெண்கள் அதிகம் வாக்களிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று நடந்த தேர்தலில் பெண்கள் ஆர்வமாக வாக்களித்தனர். ஆண் வாக்காளர்கள் மொத்தம் 35 ஆயிரத்து 767 பேரில் 23 ஆயிரத்து549 பேரும், பெண் வாக்காளர்கள் 36 ஆயிரத்து497 பேரில் 26 ஆயிரத்து876 பேர் வாக்களித்தனர். திருநங்கைகள் 15 பேரில் 12 பேர் தங்களது ஜனநாயக கடமையாற்றினர். இதில் ஆண்களை விட பெண்களே அதிகம் வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்த வாக்காளர்கள் 72 ஆயிரத்து279 பேரில் 50 ஆயிரத்து437 பேர் வாக்களித்தனர். 21 ஆயிரத்து842 பேர் தங்களது வாக்கினை பதிவு செய்யவில்லை.

மேலும் செய்திகள்