தக்காளி விலை கிடுகிடு உயர்ந்தது.

மழையால் தக்காளி வரத்து குறைந்ததால் விலை கிடுகிடு என்று உயர்ந்தது. கடைகளில் ஒரு கிலோ ரூ.44-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Update: 2021-10-09 18:26 GMT
திருப்பூர்
மழையால் தக்காளி வரத்து குறைந்ததால் விலை கிடுகிடு என்று உயர்ந்தது. கடைகளில் ஒரு கிலோ ரூ.44-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தக்காளி விலை உயர்வு
சமையலுக்கு அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகளில் தக்காளிக்கு முக்கிய பங்கு உண்டு. சுலபமாக ரசம் வைக்க வேண்டும் என்றால் கூட தக்காளியை பயன்படுத்த வேண்டும். அதனால் சமையலுக்கு தக்காளியின் பயன்பாடு என்பது முக்கிய தேவையாக உள்ளது. 
 திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் அதிக அளவில் காய்கறி சாகுபடி நடைபெற்று வருகிறது. இதில் குறிப்பாக தக்காளி அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கே விளைவிக்கப்படும் தக்காளிகள் வேன்கள் மூலமாக விவசாயிகள் திருப்பூர் தினசரி மார்க்கெட்டிற்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார்கள். மேலும் ஓசூர் போன்ற பகுதிகளில் இருந்தும் திருப்பூருக்கு தக்காளி அதிகளவில் வருகிறது.கடந்த ஒரு வாரமாக தக்காளியின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மூன்று நாட்களுக்கு முன்பு திருப்பூரில் சில்லறை விற்பனையாக ரூ.34- க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி பின்னர் ரூ.44 ஆக உயர்ந்து நேற்று ரூ.47 வரை விற்பனை செய்யப்பட்டது.
விளைச்சல் குறைவு
சமையலுக்கு முக்கிய தேவையான தக்காளியின் விலை நாளுக்குநாள் ஏறுமுகத்தில் இருப்பதால் இல்லதரசிகள் விழி பிதுங்கி உள்ளனர்.
இல்லத்தரசிகள் கூறும்போது ஏற்கனவே சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ஏறுமுகத்தில் உள்ளது. இந்த நிலையில் காய்கறிகளின் விலையும் அதிகரித்து வருகிறது. சமையலுக்கு முக்கிய தேவையான தக்காளி விலை 2 நாட்களில் கிலோவுக்கு ரூ.14 வரை உயர்ந்துள்ளது கவலை அளிக்கிறது என்றனர்.
இதுகுறித்து வியாபாரிகள் கூறும் போது கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மழை பெய்ததால் தக்காளி செடியில் பூக்கள் அதிகளவில் உதிர்ந்து விட்டது. அதன் காரணமாக தக்காளி விளைச்சல் பெருமளவு குறைந்துவிட்டது. பொங்கலூர் பகுதியில் இருந்து தக்காளி அதிகம் வரும். ஆனால் சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்துவிட்டது. வரத்து குறைவு காரணமாக விலை உயர்ந்து வருகிறது என்றனர்.
தொடர்ந்து மழை இருக்குமானால் மேலும் விலை உயர வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர். மழை பொழிவு இல்லாத பட்சத்தில் மட்டுமே விலை குறைய வாய்ப்பு இருப்பதாக மேலும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்