கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 73.29 சதவீதம் வாக்குப்பதிவு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 73.29 சதவீதம் வாக்குப்பதிவு;
கிருஷ்ணகிரி, அக்.10-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காலியாக இருந்த 13 பதவிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் நேற்று நடந்தது. மொத்தம் 73.29 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. வாக்குப்பதிவை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி நேரில் ஆய்வு செய்தார்.
உள்ளாட்சி தேர்தல்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர், 3 ஊராட்சி மன்றத் தலைவர், 9 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது. 13 பதவிகளுக்கு மொத்தம் 39 பேர் போட்டியிட்டனர். அதன்படி பர்கூர், ஓசூர், கெலமங்கலம், தளி, ஊத்தங்கரை, வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி உட்பட 7 ஒன்றியங்களில் நேற்று தேர்தல் நடந்தது.
7 ஒன்றியங்களிலும் மொத்த 23 ஆயிரத்து 535 வாக்காளர்கள் இருந்தனர். நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி இரவு 7 மணி வரை நடந்தது. மொத்தம் 73.29 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன..
கலெக்டர் ஆய்வு
வேப்பனப்பள்ளி ஒன்றியம், எண்ணெகோல்புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கிராம ஊராட்சி 9-வது வார்டு உறுப்பினர் தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது. இந்த மையத்தை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஜெயசந்திர பானு ரெட்டி ஆய்வு செய்தார்.
அப்போது கலெக்டர் கூறுகையில், வாக்குப்பதிவு மையங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. முககவசம் அணிந்து சமூக இடைவெளி கடைபிடித்து பொதுமக்கள் வாக்களித்தனர். மேலும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும், காவல் துறை பாதுகாப்பு ஏற்பாடுகள், குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டிருந்தது என்றார்.
ஆய்வின் போது வேப்பனப்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சென்னகிருஷ்ணன், ஹேமலதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.