வெண்ணந்தூர் பகுதியில் ஊரக உள்ளாட்சி தேர்தல்-வாக்குப்பதிவை கலெக்டர் பார்வையிட்டார்

வெண்ணந்தூர் பகுதியில் நேற்று நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவை கலெக்டர் ஸ்ரேயாசிங் நேரில் பார்வையிட்டார்.

Update: 2021-10-09 18:04 GMT
நாமக்கல்:
ஊரக உள்ளாட்சி தேர்தல்
நாமக்கல் மாவட்டத்தில் வெண்ணந்தூர் வட்டாரத்தில் மாவட்ட ஊராட்சி 6-வார்டு உறுப்பினர் பதவிக்கு 107 வாக்குச்சாவடிகளிலும், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் வார்டு உறுப்பினர் மற்றும் 2 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு மொத்தம் 13 வாக்குச்சாவடிகளிலும் நேற்று ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது.
இதேபோல் கபிலர்மலை வட்டாரம் கோப்பணம்பாளையம் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் பதவிக்கு 5 வாக்குச்சாவடிகளிலும், நாமகிரிப்பேட்டை வட்டாரத்தில் திம்மநாயக்கன்பட்டி ஊராட்சி தலைவர் மற்றும் 3 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு மொத்தம் 8 வாக்குச்சாவடிகளிலும், பரமத்தி வட்டாரத்தில் கூடச்சேரி ஊராட்சி தலைவருக்கு 3 வாக்குச்சாவடிகளிலும், புதுச்சத்திரம் வட்டாரத்தில் 3 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 3 வாக்குச்சாவடிகளிலும், மோகனூர் மற்றும் கொல்லிமலை வட்டாரங்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு தலா 1 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 141 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 603 வாக்குப்பதிவு அலுவலர்கள் இந்த தேர்தல் பணியில் ஈடுபட்டனர்.
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கொரோனா நோய்த்தடுப்பு பணிக்கு சுகாதார துறையினரால் உரிய பயிற்சி வழங்கப்பட்டு, 2 தன்னார்வலர்கள் நியமனம் செய்யப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
கலெக்டர் பார்வையிட்டார்
வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம், நெ.3 கொமாரபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பொன்பரப்பிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அனந்தகவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, வெள்ளைப்பிள்ளையார் கோவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுவதை கலெக்டர் ஸ்ரேயாசிங் நேரில் பார்வையிட்டார்.
வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க வந்திருந்த பொதுமக்களிடம், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட விவரங்கள் குறித்து கேட்டறிந்த கலெக்டர், கொரோனா தடுப்பூசி முதல் தவணை மற்றும் 2-ம் தவணை தடுப்பூசிகள் செலுத்தி கொள்ளாதவர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ள 5-ம் கட்ட சிறப்பு தடுப்பூசி முகாம்களில் செலுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வுகளின் போது வெண்ணந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மாதவன் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்