வேலூர் மாநகராட்சி பகுதியில் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு வாஷிங் மிஷின், மிக்சி, தங்க நாணயம்
வேலூர் மாநகராட்சி பகுதியில் நடக்கும் சிறப்பு முகாமில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நபர்களுக்கு வாஷிங் மிஷின், தங்க நாணயம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர்
வேலூர் மாநகராட்சி பகுதியில் நடக்கும் சிறப்பு முகாமில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நபர்களுக்கு வாஷிங் மிஷின், தங்க நாணயம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொரோனா தடுப்பூசி முகாம்
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தவும், தொற்றால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்கவும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதையொட்டி கடந்த 4 வாரங்களாக ஞாயிற்றுக்கிழமை அன்று மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இவற்றில் 1 லட்சத்து 42 ஆயிரத்து 158 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
அதன்தொடர்ச்சியாக இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) மாபெரும் தடுப்பூசி முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள பஸ் நிலையங்கள், மார்க்கெட், பஜார், ஆட்டோ, கார் நிறுத்தங்கள், வணிக வளாகங்கள் உள்பட 1,000 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது.
வேலூர் மாநகராட்சி பகுதியில் 300 இடங்களில் நடக்கும் முகாம்களில் 27 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முகாமுக்கு பொதுமக்களை வரவழைக்கும் வகையில் தடுப்பூசி போடும் நபர்களுக்கு குலுக்கல் முறையில் பல்வேறு பரிசுகள் வழங்க வேலூர் மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.
வாஷிங் மிஷின், மிக்சி, செல்போன்
வேலூர் மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களிலும் நடைபெறும் முகாமில் தடுப்பூசி போடும் நபர்களுக்கு ஒரு டோக்கன் வழங்கப்படும். அந்த டோக்கனில் அவர்களில் செல்போன் எண்கள் எழுதப்பட்டு அவை மொத்தமாக சேகரிக்கப்படும். பின்னர் மறுநாள் (திங்கட்கிழமை) கலெக்டர் குமாரவேல்பாண்டியன் முன்னிலையில் மண்டலம் வாரியாக தனித்தனியாக டோக்கன்களுக்கு குலுக்கல் நடைபெறும்.
இதில், முதல் பரிசாக ஒருவருக்கு வாஷிங் மிஷின், 2-ம் பரிசாக ஒருவருக்கு மிக்சி, 3-ம் பரிசாக ஒருவருக்கு செல்போன் ஆகியவை வழங்கப்படும். அதைத்தவிர தன்னார்வலர்கள் மூலம் பல்வேறு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.
இதுகுறித்து மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் ஆட்டோ, வேன் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்களுக்கு வழங்க மண்டலம் வாரியாக டோக்கன் தயார் செய்யும் பணி நடந்து வருகிறது என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.