தடுப்பணை கட்டும் பணியை மீண்டும் தொடங்க வேண்டும்

திருநகரி வெள்ளப்பள்ளம் உப்பனாறு பகுதியில் தடுப்பணை கட்டும் பணியை மீண்டும் தொடங்க வேண்டும்;

Update: 2021-10-09 17:36 GMT
திருவெண்காடு;
திருநகரி வெள்ளப்பள்ளம் உப்பனாறு பகுதியில் தடுப்பணை கட்டும் பணியை மீண்டும் தொடங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
உப்பனாறு
மயிலாடுதுறை மாவட்டம் திருப்புங்கூர், கற்கோவில், தொழுதூர், வடபாதி, சீர்காழிநகரம், புதுதுறை, வெள்ளப்பள்ளம், திருநகரி வழியாக கீழமூவர்கரை கடலில் வெள்ளப்பள்ளம் உப்பனாறு கலக்கிறது.
 கொள்ளிடம் ஆற்றுக்கு அடுத்தபடியாக மழை காலங்களில் 20 ஆயிரம் கனஅடி அளவுக்கு வெள்ள நீர் வடியும் ஆறாக விளங்குகிறது. இந்த ஆற்றின் கரையோரம் உள்ள திருமுல்லைவாசல், எடமணல், வழுதலை குடி, புதுதுறை, மணல்மேடு, சட்டநாதபுரம் உள்ளிட்ட 45-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்காக மிகவும் உபயோகமாக உப்பனாறு இருந்து வந்தது. 
விவசாயம் பாதிப்பு
கடந்த 20 ஆண்டுகளாக கடல்நீர் அடிக்கடி இந்த ஆற்றின் வழியாக, கிட்டத்தட்ட 29 கிலோ மீட்டருக்கு தொலைவுக்்கு  உள்ளே செல்வதால், ஏராளமான கிராமங்களில் நிலத்தடி நீர் உவர் தன்மை கொண்டதாக மாறிவிட்டது. இதனால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டு விட்டது.  இதைத்தொடர்ந்து திருநகரி கிராமத்தில் வெள்ளப்பள்ளம் உப்பனாற்றில்  தடுப்பணை கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். 
ரூ.31 கோடி
கடந்த ஆண்டு அப்போதைய தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நபார்டு வங்கி திட்டத்தின் கீழ் நவீன கதவணையுடன் கூடிய தடுப்பணை கட்ட ரூ.31 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிட்டார். இதைத்தொடர்ந்து தடுப்பணை கட்டும் பணிகள் தொடங்கின. இந்தநிலையில் தடுப்பணை கட்டும் பணி சுமார் 6 மாதங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டு விட்டது. மேலும் தடுப்பணை கட்டும் பணிக்காக கொண்டுவரப்பட்ட எந்திரங்கள் மற்றும் கட்டுமான பொருட்களை எடுத்து சென்று விட்டதால், இந்த திட்டம் மீண்டும் செயல்படுமா? என விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். 
மீண்டும் தொடங்க கோரிக்கை
மேலும் தடுப்பணை கட்டுவதற்காக அமைக்கப்பட்ட மணல் தடுப்பு அணை, கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழையின் காரணமாக உடைந்து விட்டது. அதன் வழியாக கடல்நீர் உட்புகுந்து சுமார் 20 கிலோ மீட்டர் அளவிற்கு சென்று விட்டது. 
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது
30 ஆண்டுகால கனவு திட்டமான வெள்ளப்பள்ளம உப்பனாற்றின் குறுக்கே திருநகரியில் தடுப்பணை கட்டும் பணி தொடங்கியதை நினைத்து மகிழ்ச்சி அடைந்தோம். ஆனால் தடுப்பணை கட்டும் பணி நிறுத்தப்பட்டு விட்டது. வரும் காலங்களில் மேற்கண்ட கிராமங்களில் நல்ல குடிநீர் மற்றும் விவசாயம் செய்ய தடுப்பணை அவசியம். எனவே தடுப்பணை கட்டும் பணியை மீண்டும் தொடங்க வேண்டும். 
இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்