கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் வாக்குச்சாவடி மையங்களை கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 2 வது கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் வாக்குச்சாவடி மையங்களை கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார்
கள்ளக்குறிச்சி
உள்ளாட்சி தேர்தல்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2-வது கட்டமாக கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், சங்கராபுரம், சின்னசேலம், கல்வராயன்மலை ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களில் 1,584 பதவிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் மொத்தம் 5,010 பேர் போட்டியிட்டனர். இதற்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கிய 1 மணி நேரத்துக்கு பிறகு சில இடங்களில் மழை பெய்ததால் வாக்குப்பதிவு மந்தமாக காணப்பட்டது. மழை நின்றதும் மீண்டும் வாக்குப்பதிவு விறு விறுப்பாக நடைபெற்றது.
கலெக்டர் ஆய்வு
கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் நிறைமதி கிராமத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஸ்ரீதர் ஆய்வு செய்தார். அப்போது வாக்குச்சீட்டுகள் முறையாக உள்ளதாக எனவும், பெயர்கள் சரி பார்க்கப்படுவது, வாக்களிப்பது, மை வைப்பது போன்ற பணிகளை அவர் ஆய்வு செய்தார்.
அதேபோல் சங்கராபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட அரசம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தினையும் கலெக்டர் ஸ்ரீதர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கும்பலாக நின்று கொண்டிருந்த வாக்காளர்களை வரிசையில் நின்று வாக்களிக்குமாறும், சமூக இடைவெளியை பின்பற்றுமாறும் அறிவுறுத்தினார். ஆய்வின் போது வட்டார மேற்பார்வையாளர் ராஜாமணி, தேர்தல் நடத்தும் அலுவலர் ரத்தினமாலா ஆகியோர் உடனிருந்தனர். தொடர்ந்து செல்லம்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.