ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறையினர் இன்று ஆய்வு
ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்கு மத்திய தொல்லியல் துறையினர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆய்வு செய்கின்றனர்.
ஸ்ரீவைகுண்டம்:
ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்கு மத்திய தொல்லியல் துறையினர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆய்வு செய்கின்றனர்.
முதுமக்கள் தாழிகள்
பண்டைய தமிழர்களின் நாகரிக தொட்டிலாக விளங்கும் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்ட அகழாய்வில் ஏராளமான முதுமக்கள் தாழிகள், மண்பாண்ட பொருட்கள், இரும்பாலான ஆயுதங்கள், தங்கம், வெண்கலத்தாலான அணிகலன்கள் உள்ளிட்ட அரிய பொருட்கள் கண்டறியப்பட்டன.
சமீபத்தில் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை ஆகிய இடங்களில் தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்ட அகழாய்விலும் ஏராளமான முதுமக்கள் தாழிகள், மண்பாண்ட பொருட்கள் போன்றவை கண்டறியப்பட்டு தமிழர்களின் தொன்மையை உலகுக்கு பறைசாற்றியது.
அருங்காட்சியகம்
இதையடுத்து ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. மேலும் இங்கு ஐரோப்பிய நாடுகளில் இருப்பது போன்று அகழாய்வு நடந்த இடத்தின் மீதே கண்ணாடி இழை பதித்து, அதன் மீது நின்று பொதுமக்கள் பழங்கால பொருட்களை நேரில் காணும் வகையில் சைட் மியூசியமும் அமைக்கப்படுகிறது.
இதையொட்டி ஆதிச்சநல்லூரில் மத்திய அரசின் சார்பில் அருங்காட்சியகம் அமைப்பதற்காக இடத்தை தேர்வு செய்யும் பணி நடந்தது. இதற்காக ஆதிச்சநல்லூரில் பல்வேறு இடங்களை மத்திய தொல்லியல் துறையினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இன்று ஆய்வு
ஆதிச்சநல்லூரில் பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்ட அகழாய்வில் கண்டறியப்பட்ட பழங்கால அரிய பொருட்களும், இங்கு அமையவுள்ள உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன. மேலும் ஆதிச்சநல்லூர் பரும்பு பகுதியில் மத்திய தொல்லியல் துறையினர் அகழாய்வு நடத்தி, அதன் மீது சைட் மியூசியம் அமைக்க திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக ஆதிச்சநல்லூர் பரும்பு பகுதியில் மத்திய தொல்லியல் துறையினர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி அளவில் ஆய்வு நடத்துகின்றனர். தொடர்ந்து திருச்சி தென்மண்டல மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அருண்ராஜ் தலைமையிலான குழுவினர் அகழாய்வு பணி மேற்கொள்கின்றனர். இதைத்தொடர்ந்து அங்கு உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம், சைட் மியூசியம் அமைக்கப்படுகிறது.