தூத்துக்குடியில் 6 கிராம பஞ்சாயத்து தலைவர் தேர்தல் அமைதியாக நடந்தது

தூத்துக்குடி மாவட்டத்தில் காலியாக உள்ள 6 கிராம பஞ்சாயத்து தலைவர், 16 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் ேநற்று அமைதியாக நடந்தது.

Update: 2021-10-09 17:20 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் காலியாக உள்ள 6 கிராம பஞ்சாயத்து தலைவர், 16 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் ேநற்று அமைதியாக நடந்தது. 

ஊரக உள்ளாட்சி தேர்தல்

ஊரக உள்ளாட்சி தேர்தலில் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் வரை ஏற்பட்ட காலியிடங்களில் 7 கிராம பஞ்சாயத்து தலைவர் பதவி மற்றும் 41 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டவர்கள் தவிர மீதமுள்ள 6 கிராம பஞ்சாயத்து தலைவர் பதவி மற்றும் 16 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் நேற்று நடந்தது. இதற்காக அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் ஓட்டு போட்டனர். 

ஓட்டப்பிடாரம்

ஓட்டப்பிடாரம் யூனியனில் வாலசமுத்திரம் மற்றும் கொல்லம்பரும்பு ஆகிய பஞ்சாயத்து தலைவர் மற்றும் 10 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் பாஞ்சாலங்குறிச்சி, ஓட்டப்பிடாரம், வாலசமுத்திரம், குதிரைக்குளம் ஆகிய பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வாகினர். கொல்லம்பரும்பு, வாலசமுத்திரம் ஆகிய பஞ்சாயத்து தலைவர் பதவிக்கும், சாமிநத்தம், தெற்கு வீரபாண்டியபுரம், தருவைகுளம், கலப்பைப்பட்டி, மருதன்வாழ்வு, கொத்தாளி ஆகிய பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கும் நேற்று தேர்தல் நடந்தது. மக்கள் ஆர்வமாக வந்து ஓட்டு போட்டனர்.

வாலசமுத்திரம், கொல்லம்பரும்பு ஆகிய கிராமங்களில் நடந்த தேர்தலை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன நிர்வாக இயக்குனரும், தூத்துக்குடி மாவட்ட தேர்தல் கண்காணிப்பாளருமான மகேஸ்வரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) சிதம்பரம், தேர்தல் நடத்தும் அலுவலர் வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடாசலம், வட்டார வளர்ச்சி அலுவலர் இப்ராகிம் சுல்தான் உள்பட பலர் உடன் இருந்தனர். 

திருச்செந்தூர்

திருச்செந்தூர் யூனியனுக்குட்பட்ட பிச்சிவிளை பஞ்சாயத்தில் 4 வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடந்தது. இங்கு மொத்தமுள்ள 567 வாக்குகளில் 282 ஓட்டுகள் பதிவாகின. அதேபோல் காயாமொழி பஞ்சாயத்தில் 4-வது வார்டு உறுப்பினர் பதவி தேர்தல் நடந்தது. இங்கு மொத்தமுள்ள 617 வாக்குகளில் 366 ஓட்டுகள் பதிவாகின.

குலசேகரன்பட்டினம் ஊராட்சியில் 5-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடந்தது. இதில் 2 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஏராளமான ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் நின்று ஓட்டு போட்டனர். வாக்களிக்க வந்த அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்