இடி-மின்னலுடன் பலத்த மழை அதிகபட்சமாக ஸ்ரீமுஷ்ணத்தில் 97 மில்லி மீட்டர் பதிவானது
மாவட்டம் முழுவதும் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக ஸ்ரீமுஷ்ணத்தில் 97 மில்லி மீட்டர் பதிவானது.
கடலூர்,
இடி-மின்னலுடன் மழை
தென்மேற்கு பருவ காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக வட மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி கடலூரில் நேற்று முன்தினம் மாலை இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமார் 2 மணி நேரம் கொட்டித் தீர்த்தது. அதன் பிறகு சிறிது நேரம் மழை பெய்யாமல் ஓய்ந்திருந்தது.
இதற்கிடையே இரவு 9 மணி அளவில் மீண்டும் இடி-மின்னலுடன் கனமழை பெய்ய தொடங்கியது. அப்போது பலத்த சூறைக்காற்று வீசியதால் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது. இந்த மழை சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. பிறகு மழை தூறிக்கொண்டே இருந்தது.
மரம் வேரோடு சாய்ந்தது
இந்த நிலையில் நேற்று காலை 11 மணி வரை மழை பெய்யவில்லை. அதன் பிறகு மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக பெய்தது. இந்த மழை ½ மணி நேரம் கொட்டியது. அதன் பிறகு மதியம் 12.30 மணி வரை தூறிக் கொண்டே இருந்தது. இதனால் நேற்று இருசக்கர வாகனங்களில் சென்றவர்களும், பாதசாரிகளும் குடைபிடித்தபடியும், சிலர் மழையில் நனைந்தபடியும் சென்றதை காணமுடிந்தது. மேலும் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் தாழ்வான பகுதிகளில் குளம்போல் தேங்கியது.
சிதம்பரம் பகுதியில் நேற்று மாலை 4 மணி முதல் 5 மணி வரை இடி-மின்னல்மற்றும் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. அப்போது இந்திரா நகரில் உள்ள பழமை வாய்ந்த அரசமரம் ஒன்று வேரோடு சாய்ந்து அருகே உள்ள மின்கம்பம், நாக கன்னியம்மன் கோவில் மற்றும் 2 வீடுகள் மீது விழுந்தது. இதில் கோவில், வீடுகள், மின்கம்பமும் சேதமடைந்தது. இதனால் அப்பகுதியில் மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது.
நடவு பணி தொடக்கம்
விருத்தாசலம், திட்டக்குடி பகுதியில் பெய்தமழையால் டி.வி.புத்தூர் கிராமத்தில் சம்பா சாகுபடி செய்யப்பட்டிருந்த வயல்களில் மழைநீர் தேங்கியது. இதனால் நூற்றுக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்திருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதனால் கவலையடைந்த விவசாயிகள் மழைநீரை வெளியேற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். திட்டக்குடி அடுத்த நாவலூர் கிராமத்தில் நேற்று மாலை பெய்த மழையின்போது முருங்கைமரம் ஒன்று முறிந்து மின்கம்பிகள் மீது விழுந்தது. அப்போது அறுந்து விழுந்த மின்கம்பியில் சிக்கி சகுந்தலா என்பவருக்கு சொந்தமான 4 ஆடுகள் மின்சாரம் தாக்கி செத்தன. இதேபோல் ஸ்ரீமுஷ்ணம், புவனகிரி, சேத்தியாத்தோப்பு, குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி உள்பட மாவட்டம் முழுவதும் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஸ்ரீமுஷ்ணத்தில் 97.2 மில்லி மீட்டரும், குறைந்தபட்சமாக குப்பநத்தத்தில் 4.6 மில்லி மீட்டரும் பதிவானது. மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால், விவசாயிகள் தற்போது நடவு பணியை தொடங்கியுள்ளனர்.