டிப்பர் லாரி-மோட்டார் சைக்கிள் மோதல் வாலிபர் பலி உறவினர்கள் சாலைமறியல்
டிப்பர் லாரி-மோட்டார் சைக்கிள் மோதலில் வாலிபர் பலியானார். அவரது உறவினர்கள் சாலைமறியல் செய்தனர்.
உப்புக்கோட்டை:
தேனி மாவட்டம் உப்புக்கோட்டை அருகே உள்ள மாணிக்காபுரத்தை சேர்ந்த சாகுல் ஹமீது மகன் அஜ்மல்கான் (வயது 24). இவர் தனது நண்பரான உப்புக்கோட்டையை சேர்ந்த ஸ்ரீதருடன் (20) தேனியில் இருந்து உப்புக்கோட்டைக்கு மோட்டார்சைக்கிளில் நேற்று மாலை வந்து கொண்டு இருந்தார். வழியில் சடையால்பட்டி பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது எதிரே ஜல்லிக்கல் ஏற்றி வந்து கொண்டிருந்த டிப்பர் லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதியது. இதில் அஜ்மல்கான் தலைசிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ஸ்ரீதரை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். விபத்து நடந்தவுடன் சிறிது தூரத்தில் டிப்பர் லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
இதனிடையே விபத்து பற்றி அறிந்ததும் அஜ்மல்கான் உறவினர்கள் டிப்பர் லாரி டிரைவரை கைது செய்ய வலியுறுத்தியும், உடலை வாங்க மறுத்தும் சடையால்பட்டியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வீரபாண்டி போலீசார் விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைய செய்தனர். பின்னர் அஜ்மல்கான் உடலை போலீசார் கைப்பற்றி தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து டிப்பர் லாரியை பறிமுதல் செய்து அதன் டிரைவரை தேடி வருகின்றனர்.