திம்பம் மலைப்பாதையில் நடுரோட்டில் லாரி பழுதாகி நின்றது

திம்பம் மலைப்பாதையில் நடுரோட்டில் லாரி பழுதாகி நின்றதால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.;

Update: 2021-10-09 14:58 GMT
தாளவாடி அருகே திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டைஊசி வளைவுகள் உள்ளன. இதன் வழியாக தினமும் பஸ், கார், லாரி, வேன் மற்றும் கனரக வாகனங்கள் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. தமிழகம்-கர்நாடகம் இடையே முக்கிய சாலையாக இந்த பாதை உள்ளது.
மலைப்பாதை குறுகிய வளைவுகளை கொண்டது. இதனால் மலைப்பாதை வழியாக அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. 
இந்த நிலையில் ஈரோட்டில் இருந்து கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகருக்கு நேற்று டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. காலை 8 மணி அளவில் திம்பம் மலைப்பாதை 9-வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது திடீரென நடுரோட்டில் லாரி பழுதாகி நின்றது.
இதனால் அந்த வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியவில்லை. ரோட்டின் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சத்தியமங்கலம் வழியாக கர்நாடக மாநிலம் செல்லும் வாகனங்கள் பண்ணாரி சோதனைச்சாவடியிலும், கர்நாடகாவில் இருந்து தமிழகம் வரும் வாகனங்கள் ஆசனூர் சோதனைச்சாவடியிலும் தடுத்து நிறுத்தப்பட்டன.
இதைத்தொடர்ந்து பண்ணாரியில் இருந்து கிரேன் வரவழைக்கப்பட்டு மீட்பு பணி நடந்தது. அதன்பின்னரே போக்குவரத்து நிலமை சீரானது. நடுரோட்டில் லாரி பழுதாகி நின்றதால் அந்த வழியாக சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்