ஜாலியன் வாலாபாக் படுகொலையைவிட உத்தரபிரதேச சம்பவம் கொடியது
ஜாலியன் வாலாபாக் படுகொலையை விட உத்தரபிரதேச சம்பவம் கொடியது என்று காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.
கூடலூர்
ஜாலியன் வாலாபாக் படுகொலையை விட உத்தரபிரதேச சம்பவம் கொடியது என்று காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.
காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம்
நீலகிரி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம், கூடலூர் ஜானகி அம்மாள் மண்டபத்தில் நேற்று மதியம் 12 மணிக்கு நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவரும், ஊட்டி எம்.எல்.ஏ.வுமான ஆர்.கணேஷ் தலைமை தாங்கினார். மாநில செய்தி தொடர்பாளர் கோபண்ணா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டு நிர்வாகிகளிடம் கலந்தாய்வு நடத்தினார். பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-
கூடலூரில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிலப்பிரச்சினை இருந்து வருகிறது. இதற்கு தீர்வு காண மாநில அரசை ஒரு குழுவும், சுப்ரீம் கோர்ட்டை மற்றொரு குழுவும் அணுக வேண்டும்.
பா.ஜனதாவின் ஊதுகுழல்
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் குழு மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நிலப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். அந்த குழு தமிழக அரசையும், சுப்ரீம் கோர்ட்டையும் அணுகும். சீமான் அனைவரையும் தரக்குறைவாக பேசுகிறார். பா.ஜனதாவின் ஊதுகுழலாக செயல்படுகிறார். அவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தியை மிகவும் கொச்சைப்படுத்தி பேசுவதை தமிழக போலீசார் கை கட்டி வேடிக்கை பார்க்கின்றனர்.
\ தி.மு.க.வுக்கும், காங்கிரசுக்கும் இடையே கொள்கைகளில் வேறுபாடு உள்ளது. ஆனால் மதசார்பின்மை என்ற கொள்கை அடிப்படையில் கூட்டணியில் காங்கிரஸ் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
பழங்குடியினர் பட்டியல்
அதன்பின்னர் காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, நிருபர்களிடம் கூறியதாவது:-
உத்தரபிரதேசத்தில் நடந்த விவசாயிகள் மீதான வன்முறை சம்பவம், ஜாலியன் வாலாபாக் படுகொலையை விட கொடியது. அந்த படுகொலையை நிகழ்த்திய ஜெனரல் டயர் கூட பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க அனுமதித்தார். ஆனால் மோடி அரசு அனுமதி அளிக்கவில்லை. நீலகிரியில் பச்சை தேயிலை விலை கிலோவுக்கு ரூ.12 மட்டுமே கிடைக்கிறது.
எம்.எஸ்.சுவாமிநாதன் அறிக்கையின்படி கிலோவுக்கு ரூ.40 விலை நிர்ணயம் செய்ய வேண்டும். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்கும்போது, இது தொடர்பாக வலியுறுத்துவோம். மேலும் படுகர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.